/indian-express-tamil/media/media_files/2025/10/10/thiruparankundram-murugan-temple-dargah-issues-madurai-high-court-3rd-judge-order-tamil-news-2025-10-10-19-38-51.jpg)
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த உத்தரவை உறுதிப்படுத்திய மதுரை ஐகோர்ட் 3-வது நீதிபதி, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய” உத்தரவையும் நிலைநிறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி வருகை புரிந்திருந்தார். அப்போது, எம்.பி-யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பரவியதால், பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனால், மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணியினர் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர். ஆனாலும், தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சோலை கண்ணன் மற்றும் பரமசிவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது; சிலர் அங்கு ஆடு, கோழி பலியிட்டு மலைப்பகுதியை ‘சிக்கந்தர் மலை’ என அழைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர்.
மற்றொரு மனுவில் ராமலிங்கம் என்பவர், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார். இதனுடன், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பாகவும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “தர்காவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்” என கோரப்பட்டது. மேலும், சுவஸ்தி ஸ்ரீலெட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர், “திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும்” என்ற மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
மாறுபட்ட தீர்ப்புகள்
இந்த வழக்குகள் அனைத்தும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டன. இருவரும் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, “திருப்பரங்குன்றம் மலை பகுதியில் அமைதி நிலவ வேண்டும்; மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இஸ்லாமியர்களுக்கு நெல்லித்தோப்பில் தொழுகை நடத்த அனுமதி வழங்கினார். மேலும், சிக்கந்தர் தர்கா புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும்; நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தக்கூடாது” என்ற கோரிக்கைகளை ஏற்று உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகள் வந்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
3-வது நீதிபதி தீர்ப்பு
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்த விசாரணைக்கு பின், இன்று (அக். 10) மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் தீர்ப்பளித்தார். அதில் அவர், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவு சரியானது” என்றும், “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்துகிறேன்” என்றும் கூறினார். மேலும், மலைப்பகுதி தொடர்பான சொத்து உரிமை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தேவையெனில் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பின் மூலம், திருப்பரங்குன்றம் மலை குறித்து பல ஆண்டுகளாக நீண்டு வரும் மத, சட்டப் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் தெளிவான தீர்வை வழங்கியுள்ளது. இதனுடன், மலைப்பகுதியில் மத நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும் என்றும், தர்கா மற்றும் கோயில் பக்தர்கள் அமைதியான முறையில் தங்கள் வழிபாட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us