திருவள்ளுவருக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் காவி ஆடை அணிவித்ததனால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், கமல் ரசிகர்கள், கமல்ஹாசனை திருவள்ளுவராக சித்தரித்து சென்னையில் ஏற்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி "தாய்" மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை, தலைநகர் பாங்காக்கில் வெளியிட்டார். இந்நிகழ்வு, எல்லா தரப்பினரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
மோடியின் இந்த நிகழ்வை, தமிழக பாரதிய ஜனதா கட்சியினர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததோடு மட்டுமல்லாமல், திமுக, தி.க கட்சியினரை வசைபாடும் நிகழ்வாகவே மாற்றி, டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில், சனாதனதர்ம சித்தாந்தங்களையே, தமிழ் வடிவில் திருவள்ளுவர் எழுதியுள்ளதாக, பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்திருந்தது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இப்போது திருவள்ளுவருக்கு ஆதரவாக பேசி வரும் பா.ஜ. கட்சியினர், கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தருண் விஜய் எம்.பி முயற்சிகள் மேற்கொண்ட போது எங்கே போய் இருந்தார்கள். திருவள்ளுவரை தீண்டத்தகாதவர் என்று தாங்கள் கூறும் சனாதனதர்மத்தை பின்பற்றும் சாமியார்களே, திருவள்ளுவர் சிலையை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தார்கள், அப்போது நீங்கள் எங்கே போய் இருந்தீர்கள் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் நியாயமான கேள்வியை எழுப்பியிருந்தனர்.
தாய்லாந்தில் மோடி, டுவிட்டரில் பா.ஜ., ஹெச்.ராஜாவின் சனாதனதர்மம், நெட்டிசன்களின் விவாதம் என கடந்த சில நாட்களாக திருவள்ளுவர் பெயர் தொடர்ந்து ஊடகங்களில் அடிபட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள், கமலையே திருவள்ளுவராக சித்தரித்து, சென்னையின் பலபகுதிகளில் ஒட்டியிருக்கும் போஸ்டர், திருவள்ளுவருக்கு உண்மையிலேயே போதாத நேரம் தான் போல....என்ற இந்த செய்தியின் தலைப்பை உண்மையாக்குவது போல் உள்ளது.