திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குளறுபடிகள் அடிக்கடி செய்தியாவது வழக்கமாகி இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகக் குளறுபடிகளால், பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள்தான்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மே மாத செமஸ்டர் தேர்வுக்கு மே 15-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்கள் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த தாள்களுக்கு மறுமதிப்பீடு (Revaluation) செய்யக் கோரி விண்ணப்பித்ததற்கு இன்னும் முடிவுகள் வெளியிடாத நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அடுத்த மே மாத செமஸ்டர் தேர்வுக்கு மே 15-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
இதனால், நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் எழுதிய தாள்களுக்கு மறுமதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், அந்த தாள்களுக்கும் மே மாத செமஸ்டர் தேர்வில் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதா? ஒருவேளை, மறுமதிப்பீட்டில் அந்த தாளில் அவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால், அந்த தாளுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தியது வீணாகிவிடுமே, என்ன செய்வது என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், கல்லூரிகளில், மாணவர்களின் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் அதெல்லாம், எங்களுக்கு தெரியாது மே 15-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிடுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதனால், மாணவர்கள் என்ன செய்து என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரன்-ஐ இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து செல்போன் வழியாக தொடர்பு கொண்டு பேசினோம்.
கடந்த செமஸ்டர் தேர்வின் மறுமதிப்பீடு (Revaluation results) முடிவுகள் வராத நிலையில், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நிலவும் குழப்பமான நிலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். இதற்கு பதிலளித்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரன் கூறியதாவது: “பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பான பல சிக்கல்களுக்கு பல்கலைக்கழக நிதிக் அலுவலகம் நிதியை உரிய நேரத்தில் அளிக்காததுதான் காரணம். கடந்த செமஸ்டர் தேர்வு மதிப்பீடு செய்ததற்கே இன்னும் அதற்கான பணத்தை செலுத்தவில்லை.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அதில், 38 ஆயிரம் மாணவர்கள் ரிவேல்யூஷனுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களின் தாள்களைத் தேடி எடுப்பதற்கு அவுட் சோர்சிங் முறையில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களை தினக் கூலி அடிப்படையி பணிக்கு எடுக்க வேண்டும். கல்லூரி படித்தவர்கள் அல்லது அதிகம் படித்தவர்களை பணி அமர்த்தினால் ஏதேனும் தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ரிவேல்யூஷன் விண்ணப்பித்த 38 ஆயிரம் மாணவர்கள் 2 தாள்களுக்கு விண்ணப்பித்திருந்தால், கவரில் இருந்து அதை பிரித்து எடுக்க வேண்டும். பிறகு, அந்த தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டும். பேராசிரியர்களைக் கொண்டு அந்த தாள்களை ரிவேல்யூஷன் செய்ய வேண்டும்.
தாள்களைத் தேடி எடுக்கும் பணியில் ஈடுபடும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.400 ஊதியமாக அளிக்கப்படுகிறது. 10 நாள் வேலை செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கான ஊதியம் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. தினக்கூலி வேலைக்கு வருபவர்களுக்கு பான் எண் கேட்டால் நாங்கள் எங்கே செல்வது.
பல்கலைக்கழத் தேர்வு பணிகளுக்கு நிதி கோரி அனுப்பினால், 2, 3 முறை கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்பினால் பரவாயில்லை. தொடர்ந்து கேள்விகள் கேட்டு காலதாமதம் செய்தால் என்ன செய்வது. இது தொடர்பாக, பேராசிரியர்கள் நேரில் சென்று கேட்டால், திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலர் அமுதா, எங்களிடம் பணியாளர்கள் இல்லை, வேண்டுமானால் நீங்கள் வந்து கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யுங்கள் என்று கூறுகிறார். இது சரியானதா?
இதுதொடர்பாக, திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலர் நிதி அளிப்பதில் காலதாமதம் செய்வது தொடர்பாக துணைவேந்தரிடம் புகார் தெரிவித்தோம். இதையடுத்து, விசாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் அறிக்கை துணை வேந்தரிடம் சமர்பிக்கப்பட்டு அது அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் பணி செய்த இடத்துக்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். அதனால், இப்படி செயல்பட்டால் நம்மை பணியிட மாற்றம் செய்துவிடுவார்கள் என்று நிதி அலுவலர் அமுதா வேண்டும் என்றே செயல்படுகிறார் ” என்று நிர்வாகச் சிக்கல்களைக் கூறினார்.
ஆனால், கடந்த செமஸ்டர் தேர்வுக்கான ரிவேல்யூஷன் ரிசல்ட் வருவதற்கு முன்னால், வருகிற செமஸ்டர் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் மே 15-க்குள் செலுத்த வேண்டும் என அறிவித்திருப்பது மாணவர்களைப் பாதிக்கும் இல்லையா என்று கேள்வி எழுப்பினோம். மேலும், அப்படி தேர்வுக் கட்டணம் செலுத்தினால், அது திரும்ப அளிக்கப்படமாட்டாது என்று கூறுகிறார்களே என்று கேள்வி எழுப்பினோம். இதற்கு பதிலளித்த, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரன், அப்படி இல்லை. பல்கலைக்கழக நிதி அலுவலகம் நிதி அளிப்பதில் காலதாமதம் செய்வது இது போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது. ரிவேல்யூஷன் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி விரைவிலேயே முடித்துவிடுவோம். மாணவர்கள் ரிவேல்யூஷனுக்கு விண்ணப்பித்த தாள்களுக்கு, இந்த மே செமஸ்டர் தேர்வில் அதே தாளுக்கு அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு, ரிவேல்யூஷனில் மாணவர் அந்த தாளில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்காக செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப செலுத்தப்படும்.
மாணவர்கள் மே 2023 செமஸ்டர் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்படும். மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். மே 22-ம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் தொடங்குகிறது.
கொரோனா காலத்தில், மாணவர்களின் நலன் கருதி தேர்வுகளில் ரிவேல்யூஷனில் தாராளம் காட்டப்பட்டது. அதனால், மாணவர்கள், ரிவேல்யூஷன் விண்ணப்பித்தாலே போதும் தேர்ச்சி பெற மதிப்பெண்களை போட்டுவிடுவார்கள் என்று இந்த முறை 38 ஆயிரம் மாணவர்கள் ரிவேல்யூஷனுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த முறை அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்களோ அதற்கு உரிய மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும். ரிவேல்யூஷனுக்கு விண்ணப்பித்தாலே போதும் பாஸ் போட்டுவிடுவார்கள் என்று மாணவர்கள் இடையே நிலவும் மனநிலை மாறும் விதமாக இந்த முறை ரிவேல்யூஷன் இருக்கும்” என்று கூறினார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலகம் நிதி அளிப்பதில் தாமதம் செய்கிறது என்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் டாக்டர் எம். சந்திரன் கூறிய புகார் தொடர்பாக, திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலர் அமுதாவை செல்போன் வழியாக தொடர்புகொண்டு பேசினோம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலர் அமுதா அமுதா நம்மிடம் பொறிந்து தள்ளினார். எங்களிடம் குறைவாகவே பணியாளர்கள் இருக்கிறார்கள். அந்த பணிகளை சூப்பிரண்ட் அளவில் உள்ளவர்களை வைத்துதான் செய்ய வெண்டும். உரிய ஆதாரங்கள் இல்லாமல் நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டால் எப்படி தர முடியும். அவுட்சோர்சிங் முறையில், தினக்கூலி பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு வாரம் வாரம் நிதி அளிக்க வேண்டும் என வாரம் வாரம் நிதி கோரி கோப்புகளை அனுப்ப வேண்டும். ஆனால், இவர்கள் தொடர்ந்து 55 நாட்களுக்கு பணி கொடுத்ததாகக் காட்டி நிதி கேட்டால் எப்படி தர முடியும். ஒரு மாதம் வேலை செய்தாலே அவரகளுக்கு தரும் ஊதியம் மாதம் சம்பளம் என்ற கணக்கில் வந்துவிடும். அப்படியானால், அவர்களுக்கு இ.பி.எஃப் தர வேண்டும்.
அதுமட்டுமல்ல, இவர்கள் அளிக்கும் ஆதாரங்கள், வருகைப் பதிவேடுகள் முறையாக இல்லாமல் போலியாக தயாரிக்கப்பட்டது போல இருக்கும்போது கேள்வி கேட்டுதான் அளிக்க முடியும். ரிவேல்யூஷன் செய்தவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அவுட் சோர்சிங் பணியாளர்களை தொடர்ந்து 3 ஷிஃப்ட் வேலை வாங்கியதாக கூறுகிறார்கள். தொழிலாளர் நல சட்டப்படி இது தவறு.
இன்னும் ரிவேல்யூஷன் பணியே தொடங்கப்படவில்லை. அதற்குள் பணம் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி கொடுக்க முடியும்.
கடந்த முறை வேல்யூஷன் கேம்ப்பிற்கு வந்தவர்கள் தங்கிய லாட்ஜ்க்கு 80 ஆயிரம் ஆனது என்கிறார்கள். எந்த லாட்ஜில் அட்வான்ஸ் பணம் கொடுக்காமல் தங்க அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு கடிதம் எழுதுகிறேன். அதை நீங்கள்தான் வெளியிட வேண்டும்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், செய்யாறு அரசுக் கல்லூரி எல்லாம் இப்படி மிகவும் மோசமாக இருக்கிறது. இங்கே ஏகப்பட்ட ஊழல் நடக்கிறது. அதைப் பற்றி கேட்காமல் நிதி அளிக்க தாமதமாகிறது என்று கூறுகிறார்கள் என்று கேட்கிறீர்கள்” என்று நிதி அலுவலர் அமுதா நம் மீதே கோபமாக சீறினார்.
தொடர்ந்து பேசிய திருவள்ளுவர் பல்கலைக்கழக நிதி அலுவலர் அமுதா, “இப்படி மோசமான ஊழல் நடக்கும் இடத்தில் வந்து மாட்டிக்கொண்டேன். பாம்பு, குரங்கு என்று இருக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வந்து மாட்டிக்கொண்டேன். எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுத்தால் போய்விடுவேன்.” என்று பொறிந்து தள்ளினார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கிறார்கள். கடந்த செமஸ்டர் தேர்வின் ரிவேல்யூஷன் ரிசல்ட் வருவதற்கு முன் வருகிற செமஸ்டர் தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் மே 15க்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதால் மாணவர்கள் குழப்படைந்துள்ளனர். ரிவேல்யூஷனில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அந்த தாளுக்கு அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால், அதை பல்கலைக்கழகம் திரும்ப செலுத்திவிடும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கூறியிருதாலும், அதனால், பாதிக்கப்படுவது மாணவர்களே. அதனால், மாணவர்கள் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாதிரியான குளறுபடிகளை பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.