உடல் எடையை குறைக்க 9 முறை அறுவை சிகிச்சை செய்த பெண் பரிதாபமாக பலியான நிகழ்வில் அவரது உறவினர்கள் முறையான விசாரணையை வலியுறுத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் வளர்மதி. வயது 45. இவர் 150 கிலோ எடையுடன் இருந்தார். இவரது இரு மகள்கள் மற்றும் மகனும் அதிக எடையுடன் இருந்தனர். இது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடைக் குறைப்பு மருத்துவமனையில் ஆலோசனை கேட்பதற்காக 4 பேரும் சென்றனர்.
இவர்களிடம் பேசிய மருத்துவர்கள், ‘இத்தனை உடல் எடையுடன் இருந்தால் ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் இதயம் செயலிழந்துவிடும். இதனால் 4 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று கூறியுள்ளனர். மேலும், ‘ஒரே குடும்பத்தை சேர்ந்த நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சலுகை விலை கிடைக்கும்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய வளர்மதி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும், அவரது இரு மகள்கள், மகனுக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வளர்மதி அதிக எடை கொண்டிருந்ததால் அவருக்கு 9-ஆவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் வளர்மதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வளர்மதியின் கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த மரணம் குறித்து வளர்மதியின் உறவினர்கள் கூறுகையில், ‘ஆலோசனை கேட்க எங்களை நிர்ப்பந்தப்படுத்தி, அந்த சிகிச்சையில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபடுத்தியது. இவ்வளவு நாள் ஏன் வைத்துக்கொண்டிருந்தீர்கள்? இதை இப்படியே விட்டால் என்னாகும் தெரியுமா?’ என்றெல்லாம் அவர்கள் பயமுறுத்தியதை பார்த்தே நாங்கள் சிகிச்சைக்கு உடன்பட்டோம்’ என்றார்கள்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது குறித்து கூறுகையில், ‘உடல் ரீதியான சிக்கலான பிரச்னைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதை மக்கள் பயன்படுத்த வேண்டும். இந்த பெண்மணியின் மரணம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றார்.
பெயரளவுக்கு இல்லாமல், முறையான விசாரணையாக இருக்க வேண்டும்.