‘மெர்சல்’ விவகாரம் : பாஜகவிடம் விஜய் பணிந்தது ஏன்? சுவாரசிய தகவல்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொகையையும் ‘மெர்சல்’ படத்தில் இறக்கிவிட்டார் முரளி.

By: October 20, 2017, 8:38:44 PM

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் திட்டங்களான ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், இயக்குநர் பா.இரஞ்சித், ‘இந்தக் காட்சிகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே, நீக்க வேண்டிய தேவை இல்லை’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் நீக்கப்படாது என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், நீக்க முடிவு செய்திருப்பதாக தயாரிப்பாளர் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் முரளி தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அவர் போனில் இதைத் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

தைரியமாக ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளை வைத்துவிட்டு, தற்போது பாஜக எதிர்ப்பு தெரிவித்த உடனேயே காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டது ஏன்?

‘மெர்சல்’ படத்தை, கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுத்துள்ளார் தயாரிப்பாளர் முரளி. தேனாண்டாள் நிறுவனத்துக்கு இது நூறாவது படம். ஏற்கெனவே திட்டமிட்டதைவிட ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டுவிட்டார் அட்லீ. மொத்தப் பணமும் இந்த ஒரு படத்திலேயே முடங்கிவிட்டதால், எப்போதோ தொடங்கி இருக்க வேண்டிய சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’ படம் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொகையையும் ‘மெர்சல்’ படத்தில் இறக்கிவிட்டார் முரளி.

தமிழகம் முழுக்க 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘மெர்சல்’ ரிலீஸாகியிருக்கிறது. 5 நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் என்பதால், எப்படியாவது போட்ட பணம் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் முரளி. ஆனால், தியேட்டர்களில் இருந்து அந்தப் பணம் கைக்கு வராமல் பாஜக சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று பயப்படுகிறார்களாம். அத்துடன், சனி, ஞாயிறு வார விடுமுறை வேறு இருப்பதால், இரண்டு நாட்களுக்கு படத்தை ஓடவிடாமல் ஏதேனும் சிக்கலை பாஜக ஏற்படுத்திவிடும் என்றும் பயந்துவிட்டார்களாம். எனவேதான், பாஜக சொன்ன உடனேயே பணிந்துவிட்டார்கள் என்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:This is the reason for removing mersal movie scenes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X