/tamil-ie/media/media_files/uploads/2017/09/thiruma-at-tiruchi.jpg)
மத்திய அரசின் கைப்பாவையாக தமிழகத்தின் புதிய கவர்னர் செயல்படக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதர மாநிலங்களைவிட தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோகித்-தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். காரணம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் இங்கு கவர்னரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்தச் சூழலில் புதிய கவர்னர் நியமனம் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘புதிய ஆளுநர் தமிழக அரசியல் சூழ்நிலையை சரிசெய்ய வேண்டும். ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் தன் கடமையை ஆற்ற வேண்டும். முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் நேர்மையாக நடைபெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தலித் மக்கள் மீது நாளுக்கு நாள் தாக்குதல் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. எனவே தமிழக முதல்வர், தலித் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முன்வர வேண்டும். தமிழகத்தில் சாதி,மதவாத கட்சிகள் எந்த காரணத்தை கொண்டும் தலை தூக்காமல் தடுக்க விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறோம்’.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.