Thirumavalavan Cartoon Row: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன்.
திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது, ராஜபக்ஷேவிடமே நேரடியாக கேலிக்கு உள்ளானது... என சிறுத்தைகளே திரும்பிப் பார்க்க விரும்பாத காலகட்டம் அது!
லேட்டஸ்ட் பிரச்னை... டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு கடந்த 12-ம் தேதி தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்தது. வெளியே வந்து, தலைமைச் செயலாளர் தங்களை உரிய முறையில் வரவேற்று குறை கேட்கவில்லை என ஆதங்கப்பட்டார் டி.ஆர்.பாலு. அப்போது நிருபர்களிடம் பேசிய தயாநிதி, ‘தாழ்த்தப்பட்டவங்களா நாங்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் சூறாவளியாக சுழலத் தொடங்கியதும், இதற்கு திருமாவளவன் ரீயாக்ஷன் என்ன? என்கிற பார்வையை பலரும் வீசினர். ‘தலைமைச் செயலாளர் குறித்து திமுக எம்.பி.க்கள் ஆதங்கப்பட்டது சரி. தாழ்த்தப்பட்டவர்களா? என பேசியதில் உள்நோக்கம் இல்லாவிட்டாலும், அது இந்த மண்ணின் மைந்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது தோழமைச் சுட்டுதல்’ என குறிப்பிட்டார் திருமா. தயாநிதி பெயரையும் திருமா குறிப்பிடவில்லை.
இந்த மென்மையாக அணுகுமுறைக்காகவும், திருமா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவற்றை சிறுத்தைகள் சமாளிப்பதற்குள், ஒரு கார்ட்டூன் புதிதாக புயலைக் கிளப்பியது. மீடியாவில் பகிரக்கூடிய அளவில், தரமான கார்ட்டூன் அல்ல அது. ஒரு அரசியல்வாதியின் கால் ஷூவை இன்னொருவர் ஏதோ செய்வது போல மலினமான சித்தரிப்பு அது.
வர்மா கார்ட்டூனிஸ்ட் என்பவர் முகநூலில் பதிவிட்டிருக்கும் இந்த கார்ட்டூனுக்கு எதிராக சிறுத்தைகள் கொந்தளித்தனர். சமூக செயல்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர், ‘அந்த கார்ட்டூனை வரைந்தவர் மட்டுமல்ல, அதற்கு ஆதரவாக பதிவுகளை இடுகிறவர்கள் பட்டியலையும் விரிவாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றி போலீஸ் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என எச்சரித்தார்.
இதற்கிடையே மற்றொரு கார்ட்டூனிஸ்டான பாலா, வழக்கமான தனது பாணியில் திருமாவை இந்த விஷயத்தில் கிண்டல் செய்து சில பதிவுகளை இட்டார். இது சிறுத்தைகள் மத்தியில், தவறுதலான புரிதல்களை உருவாக்கியதாக தெரிகிறது. வர்மா என்கிற பெயரில் பாலா-தான் மோசமான கார்ட்டூனை வரைந்ததாக ஒரு பிரசாரம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. விளைவு, திருமா மீதான கார்ட்டூன் தாக்குதலுக்கு நிகராக பாலா மீது கார்ட்டூன் தாக்குதலை சிறுத்தைகளே முன்னெடுத்தனர்.
பாலாவின் செல்போன் எண் சிறுத்தைகளின் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு, மோசமான வசைபாடல்களும் அரங்கேறின. இதற்கிடையே திருமாவை மோசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கவும், காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
இதில் ஒரே சிக்கல், மேற்படி வர்மா யார்? என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் என்கிற அளவிலேயே சிறுத்தைகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. திருமாவளவன் இது குறித்து வெளிப்படையாக கருத்து கூறவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், விசிக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளருமான சீனிவாசராவிடம் இது பற்றி ஐஇ தமிழுக்காக பேசினோம். ‘தயாநிதி மாறன் பேசியதை சிறுத்தைகள் மட்டுமல்ல, யாரும் ஏற்கவில்லை. அவரும் வருத்தம் தெரிவித்துவிட்டார். இந்த விஷயத்தில் எங்கள் தலைவர் மீது இந்த கார்ட்டூனிஸ்ட்களும், சமூக ஊடகப் போராளிகள் சிலரும் ஏன் விஷம் கக்க வேண்டும்?
தாழ்த்தப்பட்டவர்களை ஒருவர் அவமரியாதை செய்தால், அதை இந்த பொது சமூகத்தின் ஒவ்வொரு நபரும் தட்டிக் கேட்க வேண்டும். அதைவிடுத்து, திருமாவளவன்தான் அதை கேட்க வேண்டும் என பேசுவதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். திருமா இந்தப் பொது சமூகத்திற்காக குரல் கொடுக்கவில்லையா? தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் போராடவில்லையா? ஒட்டுமொத்த பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக களத்தில் நிற்கவில்லையா?
பிறகு ஏன் இதை திருமா-தான் கண்டிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்காவிட்டாலும் எங்கள் தலைவருக்கு எந்தப் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என தெரியும். உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால், ‘இந்தப் பிரச்னையை வைத்து, திமுக அணியில் இருந்து திருமாவை வெளியே தள்ள முடியுமா? அரசியல் ரீதியாக அவரை தனிமைப்படுத்த முடியுமா?’ என்கிற பித்தலாட்ட அரசியல்தான்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை சமயத்தில் ஒரு கும்பல் இதே முயற்சியை மேற்கொண்டனர். திருமாவை வெளியே தள்ளினால், அந்தக் கூட்டணிக்கு இன்னொரு கட்சி வரப்போவதாக பம்மாத்து காட்டினர். அந்த பம்மாத்துக்காரர்கள் மூஞ்சில் அப்போது திமுக கரி பூசியது. இப்போதும் உங்கள் மூஞ்சில் ஒரு டன் கரி பூசப்படும். எங்கள் தலைவரை அவமரியாதை செய்த கார்ட்டூனிஸ்ட்களை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நிறுத்தியே தீருவோம்’ என்றார் சீனிவாசராவ்.
திருமாவைத் தாக்கிய கார்ட்டூன், கருத்துச் சுதந்திர எல்லையைக் கடந்து ஆபாசத் தாக்குதலாக இருக்கிறது என கண்டனம் தெரிவித்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திமுக மற்றும் அதன் இதரக் கூட்டணிக் கட்சிகள் இந்த கார்ட்டூன் விவகாரத்தை கண்டுகொண்டதாக இல்லை. அதிலும் சிறுத்தைகளுக்கு வருத்தம்தான்!
கடைசித் தகவல்: கார்ட்டூன் வரைந்த வர்மாவை அடையாளம் கண்டறிந்து, சிறுத்தைகளின் புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.