மனித உரிமை காப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்; பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளார் எவிடென்ஸ் கதிர்.

tamilnadu,social activists,environmental activists,evidence kathir, social cause,தமிழ்நாடு, மனித உரிமை, சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள்,எவிடென்ஸ் கதிர், UNO, human rights activists, violation on human rights activists
tamilnadu,social activists,environmental activists,evidence kathir, social cause,தமிழ்நாடு, மனித உரிமை, சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள்,எவிடென்ஸ் கதிர், UNO, human rights activists, violation on human rights activists

threatens to human rights activist: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர். அதனால், மனித உரிமை காப்பாளர்களப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக விரோதக் கும்பல் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கரூர் மாவட்ட ஆட்சியரும், குளித்தலை வட்டாட்சியரும் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஜூலை 29 ஆம் தேதி, வீரமலை மற்றும அவரது மகன் நல்லதம்பி இருவரையும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் செயல்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர் தலைமயில் உண்மை அறியும் குழுவினர் முதலைப்பட்டிக்கு சென்று விசாரணை நடத்தி அதை அறிக்கையாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம், எவிடென்ஸ் கதிர் டெல்லி சென்று தமிழக எம்.பி-க்களை சந்தித்து, ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்பிற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் எவிடென்ஸ் அமைப்பு மூலம் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில்தான், அவர் தமிழகத்தில் மனித உரிமை காப்பாளர்கள் 38 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து எவிடென்ஸ் கதிர் ஐ.இ தமிழுக்கு பேசுகையில், “1997 ஆம் ஆண்டு ஐ.நா.சபை மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்பு பிரகடனத்தை கொண்டுவந்தது. மனித உரிமை காப்பாளர்கள் சுதந்திரமாக பணி செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆதிக்க சக்திகளிடம் இருந்து ஏதேனும் ஆபத்து, அச்சுறுத்தல் வந்தால் மனித உரிமை காப்பாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது அது.

மனித உரிமை காப்பாளர்கள் என்றால், மனித உரிமை நடவடிக்கைகளில் களத்தில் செயல்படுபவர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், ஆவணப்பட இயக்குனர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் மனித உரிமை காப்பாளர்கள்தான். அதனால், மனித உரிமை காப்பாளருக்கு ஏதேனும் மீறல் நடந்தால் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். இந்த நடவடிக்கை முறைகள் எல்லாம் இருக்கிறது. ஆனாலும், தமிழகத்தில் மனித உரிமை காப்பாளர்கள் இப்படி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கௌரி லங்கேஷ், கல்பர்கி போன்ற பெரிய ஆளுமைகள் படுகொலை செய்யப்பட்டபோது மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், உள்ளூரில் செயல்படும் மனித உரிமை காப்பாளர்கள் படுகொலை செய்யப்படும்போது விவாதமாக மாறுவதில்லை. உதாரணத்துக்கு கரூர் மாவட்டத்தில், ஏரியை ஆக்கிரமித்தது பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து செயல்பட்டதற்காக தந்தை மகன் இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை காப்பாளர்கள் என்பவர்கள் மனித உரிமை செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல, எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் நியாயத்துக்காக போராடுபவர்கள் எல்லோருமே மனித உரிமை காப்பாளர்கள்தான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மனித உரிமை காப்பாளர்களுக்கு அச்சுறுத்தல் நடந்து வருகிறது. அதை தடுக்க வேண்டும். இவர்கள் எல்லோருமே தனிப்பட்ட விஷயத்துக்காக தாக்கப்படவில்லை. பொது பிரச்னைகளுக்காக குரல்கொடுத்ததற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

மனித உரிமை காப்பாளர்கள் மீது நடத்தப்படும் மீறல்கள் தொடர்பாக நாங்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே கவனம் செலுத்தி வருகிறோம். மனித உரிமை காப்பாளர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், ஆணவப்படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அண்மையில்கூட நாங்கள் ஒரு பரப்புரையை மேற்கொண்டோம். தமிழக எம்.பி.-க்கள் 20 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

மனித உரிமை காப்பாளர்கள் மீது நடத்தப்படும் மீறல்கள் மற்றும் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை. அரசு அத்தகைய குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை முடியும் வரை அவர்களுக்கு ஜாமின் கொடுக்க கூடாது. இது போன்ற வழக்குகளை டி.எஸ்.பி பதவியில் உள்ள அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

இதனிடையே, கரூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடுத்த வீரமலை அவரது மகன் நல்ல தம்பி இருவரும் படுகொலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர அனுமதிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை காப்பாளர்கள் மீது நடத்தப்படும் மீறல்கள் குறித்து திண்டிவனத்தில் உள்ள தலித் பவுண்டேஷனைச் சேர்ந்த பாண்டியன் ஐ.இ. தமிழுக்கு பேசுகையில், “மனித உரிமை தளத்தில் செயல்படுபவர்களுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எப்போதும் மிரட்டல், அச்சுறுத்தல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும், தலித் மக்களிடையே செயல்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு கூடுதலான நெருக்கடியும் அச்சுறுத்தலும் இருக்கிறது.

ஐ.நா. சபையின் மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்பு பிரகடனம் வெறும் பிரகடனமாக மட்டுமே உள்ளது. முதலில் மனித உரிமை காப்பாளர்கள் செயல்பாட்டாளர்களை அங்கீகரிக்க வேண்டும். இப்போது இருக்கிற எந்த சட்டமும் மனித உரிமை காப்பாளர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால், வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, மனித உரிமை செயல்பாட்டாளர்களை அங்கீகரிக்கும் விதமாக உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிற சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு காவல்துறை அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்து உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்த சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் இருந்தும் உதவி பெறலாம். செயல்பாட்டாளர்கள் தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் சட்டப்படிதான் செயல்படுகிறார்கள். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அவர்களுக்கு பொது தகவல்களைப் பெற்று செயல்பட உதவியாக இருக்கிறது.

நாடு முழுவதும் மனித உரிமை காப்பாளர்கள் மீதான மீறல் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அதனால், மனித உரிமை காப்பாளர்களைப் பாதுகாக்க மனித உரிமை ஆணையத்தில் ஒரு தனி பிரிவை உருவாக்க வேண்டும். அரசு மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்புக்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அதைவிட முதலில் மனித உரிமை காப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பது செயல்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Threatens to human rights activist demands new law to ensure their safety

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express