அமைச்சரே அழைத்த திமுக எம்.எல்.ஏ.க்கள்; வந்த இடத்தில் 'திடீர்' கைது!

அழைப்பது போல் அழைத்துவிட்டு இப்படி கைது செய்துள்ளனர்

புதுக்கோட்டையில் இன்று நடந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த மூன்று தி.மு.க. எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யனாதன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. ரகுபதி அளித்த பேட்டியில், “நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் மூவருக்கும் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். வட்டாட்சியர் நேரில் வந்து அழைப்பிதழைக் கொடுத்தார். இதனை நம்பி நாங்கள் கிளம்பி வந்தோம். ஆனால், சம்பந்தமேயில்லாமல் எங்களை கைது செய்துவிட்டனர். அழைப்பது போல் அழைத்துவிட்டு இப்படி கைது செய்துள்ளனர்” என்றார்.

ஆனால், காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பிருந்தாவனம் சந்திப்பில் மூன்று எம்.எல்.ஏக்களும் சாலை மறியல் செய்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த விளக்கம் குறித்து புதுக்கோட்டை எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு கூறுகையில், “நாங்கள் அப்படி சாலைமறியல் செய்யவேயில்லை. முடிந்தால் காவல்துறையை நிரூபிக்கச் சொல்லுங்க” என்றார்.

இந்நிலையில், இந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த விழாவில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள், எம்பி., மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

×Close
×Close