நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கலான புதிய மசோதாவை ஏற்க முடியாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.