Advertisment

கனிமக் கடத்தலுக்கு ரூ20 கோடி அபராதம்; நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள் மாற்றம்

நெல்லையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுத்த நெல்லை எஸ்.பி மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
Balaji E
New Update
Tirunelveli SP and Sub Collector transferred, Tirunelveli SP Manivannan transferred, நெல்லை எஸ்பி மணிவண்ணன், சட்டவிரோத குவாரிகள், குவாரிகள், கனிம கடத்தல், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லையில் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம், Nellai SP Manivannan taken action against illegal Quarry mines mafia, cheranmahadevi sub collector Sivakrishnamoorthy, rs 20 crore penalty to illegal quarry and mines

நெல்லையில் கனிமக் கடத்தலைத் தடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, கனிமக் கடத்தலுக்கு ரூ.20 கோடி அபராதம் விதித்த திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணனும் சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பொதுவாக கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது என்ற புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், நெல்லையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் எடுக்கப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் நெல்லை எஸ்.பி மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் அறியப்பட்டவர்கள். இந்த சூழ்நிலையில்தான் உயர் அதிகாரிகள் இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகள் கனிம வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. நெல்லையில் உள்ள கல் குவாரிகளில் பல குவாரிகள் திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் தங்கள் பினாமிகளின் பெயரில் நடத்தி வருவதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக கல் குவாரிகளில் இருந்து கற்களை உடைத்து வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல கனிமவளத் துறையிடம் இருந்து நடை அனுமதி சீட்டு பெற வேண்டும். ஆனால், குவாரிகளின் உரிமையாளர்கள் ஒரே எண் நடைச்சீட்டை வைத்துக்கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குவாரிகளில் கற்களை உடைத்து கடத்துவது நடந்து வருகிறது.

கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக பாறைகளை வெடி வைத்து உடைக்கும்போது அதிக அளவில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாறைகள் வெடி வைத்து உடைக்கும்போது குவாரியின் அருகேயும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதே போல, திருநெல்வேலி மாவட்டம், சீத்தாக்குளத்தில் கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைத்தபோது ஏற்பட்ட பயங்கர அதிர்வால் அருகே இருந்த வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த குழந்தை உயிரிழந்த சோக நிகழ்வை அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

கல் குவாரியில் வெடி வைத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் வீடு இடிந்து விழுந்ததால் குழந்தை பலியான சம்பவம் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி திடீரென அதிரடி சோதனை நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார். இருக்கன்துறையில் உள்ள ஒரு கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டதை ஆய்வு செய்து கண்டுபிடித்த சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி அந்த குவாரிக்கு ரூ. 20 கோடியே, 11 லட்சத்து 64 ஆயிரத்து 352 ரூபாய் அபராதம் விதித்தார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கனிம கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பறிமுதல் செய்தார்.

இப்படி, நெல்லை மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் இருந்து கனிமங்களை வெட்டி சட்டவிரோதமாக கடத்திய லாரிகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் எஸ்.பி மணிவண்ணனும் மக்கள் மத்தியிலும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பாராட்டுதல்களைப் பெற்றனர்.

அதிலும் நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் ஒரு இயற்கை ஆர்வலருமாவார். இவர் பணி தொடர்பாக செல்லும் மாவட்டங்களில் காவல்துறை இல்லங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பது இயற்கையை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என்று இயற்கை பாதுகாப்பு செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர் . இதற்கு முன்பு, மணிவண்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பி-யாக இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனுடன் இணைந்து கனிமக் கடத்தல்களைத் தடுத்து கனிமக் கடத்தல் கும்பலுக்கு தண்ணி காட்டினார்.

கடந்த 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல்குவாரிகள் அமைப்பவர்கள், மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாத பட்டியலில் இருந்த 28 குவாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நாகராஜன், செயல்படத் தடைவிதித்து அந்தக் குவாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்தார். அப்போது, கனிமக் கடத்தல் லாரிகளை மடக்கிப் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்தவர்தான் நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் என்று குமரி மாவட்ட சூழலியல் செயற்பாட்டளர்களும் பொதுமக்களும் இப்போதும் கூறுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கேரளாவுக்கு கடத்தப்படுவதற்கு பெரும் தடையாக இருந்த மாவட்ட எஸ்.பி மணிவண்ணனும் மாவட்ட ஆட்சியர் நாகராஜனும் சில நாட்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது நெல்லை மாவட்டத்திலும் குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தியதோடு அந்த குவாரிகளுக்கு ரூ. 20 கோடி அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்த சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியும் மாவட்ட எஸ்.பி மணிவண்ணனும் தமிழக அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கனிமக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்திருப்பதால் பொதுமக்களும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், நெல்லையில் குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவது தடுக்கும் நடவடிக்கை தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், நெல்லை மாவட்ட புதிய எஸ்பியாக டிசம்பர் 6ம் தேதி பொறுப்பேற்ற சரவணன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சரவணன் பதவியேற்கும் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுவாக புதியதாக பதவியேற்கும் மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், சரவணன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை இதற்கு காரணம், செய்தியாளர்கள் சந்திப்பில் நெல்லைய்ல் கல்குவாரி, கனிமவளக் கடத்தல் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்பதாலேயே, எஸ்பி சரவணன் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததாக நெல்லை மாவட்ட மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக கூட்டம் சேரக்கூடாது என்பதால்தான் புதிய எஸ்.பி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆட்சி மாறினாலும், அதிகாரிகள் மாறினாலும், யாராக இருந்தாலும் நெல்லையில் நடைபெறும் கனிமக் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நெல்லை மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது. மக்களின் இந்த கோரிக்கையை புதிய அதிகாரிகள் நிறைவேற்றுவார்களா?

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nellai Koodankulam Thirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment