/indian-express-tamil/media/media_files/2025/10/05/tirunelveli-2025-10-05-19-06-07.jpg)
Tirunelveli
திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஜடாயுப் படித்துறையில் இன்று (அக்டோபர் 5) பெரும் துயரச் சம்பவம் நிகழ இருந்த நிலையில், அது தன்னார்வலர்களின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டது. திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மூன்று பேர் - ஒரு சிறுவன் மற்றும் இரண்டு பெரியவர்கள் - ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் சிக்கி தவித்தனர். நீச்சல் தெரியாமல் அவர்கள் மரணப் பிடியில் போராடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்தவர்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளாயினர்.
கடவுள் போல் வந்த உழவாரப்பணி தன்னார்வலர்கள்
இந்த படித்துறையை வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு மற்றும் அருகன்குளம், நாராணம்மாள்புரம் ஊர் மக்கள் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று 18-வது மாத உழவாரப்பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அபாயக்குரல் கேட்ட மறுகணமே, பணியில் இருந்த தன்னார்வலர்கள் தயக்கமின்றி ஆற்றுக்குள் குதித்தனர். அருகன்குளத்தைச் சேர்ந்த தாமிரபரணி தூய்மைப் பணி தன்னார்வலர்கள் பட்டு, இசக்கி முத்து, சங்கர் மற்றும் இசக்கி முத்து ராசு ஆகியோர் ஆபத்தில் சிக்கிய மூன்று பேரையும் போராடி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
சிறுவன் அளித்த விழிப்புணர்வு செய்தி
உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன், இந்த நிகழ்வு குறித்து பேசியபோது, “நாங்கள் துணி துவைக்க ஆற்றுக்கு வந்தோம். ஆர்வம் காரணமாக ஆழமான இடத்துக்குள் இறங்கி சிக்கிக் கொண்டேன். அங்கிருந்த அண்ணாக்கள் என்னைக் காப்பாற்றினார்கள். யாருமே தயவுசெய்து நீச்சல் தெரியாமல், ஆழம் புரியாமல் ஆற்றில் இறங்க வேண்டாம்” என்று நெகிழ்ச்சியோடு வேண்டுகோள் விடுத்தான். ஆற்றில் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளுக்கு, ஆர்வக்கோளாறு அல்லது ஆழம் தெரியாத அறியாமையே முக்கிய காரணம் என்பதை இந்தச் சிறுவனின் அனுபவம் உணர்த்துகிறது.
அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது: நேரில் கண்டவர் சாட்சியம்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இராதாகிருஷணன் என்பவர், “தாத்தா, பேரன் மற்றும் இன்னொருவர் என மூன்று பேரும் ஆழத்தில் தத்தளித்தனர். தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் உடனே இறங்கி, பெரும் அசம்பாவிதம் நிகழ இருந்ததை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் இன்று ஆத்தை மட்டும் காப்பாற்றவில்லை, மூன்று உயிர்களையும் காப்பாற்றியிருக்கிறார்கள்” என்று தன்னார்வலர்களின் பணியைப் பாராட்டினார். இந்த பணியின்போது, பரிகாரம் என்ற பெயரில் ஆற்றுக்குள் வீசப்பட்ட பழைய துணி, காப்பாற்றச் சென்ற பட்டுவின் காலில் சிக்கி மீட்புப் பணிக்குச் சிரமம் கொடுத்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு தன்னார்வலர்களின் முக்கிய வேண்டுகோள்
மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர் பட்டு அவர்கள் பேசுகையில், “மீட்கச் சென்றபோது பழைய துணிகள் காலில் சிக்கியதால், சிறுவனை மீட்க சற்று தாமதமானது. தாமிரபரணி ஆற்றில் குளிக்க வருபவர்கள், தயவுசெய்து ஆழம் தெரியாமல் இறங்க வேண்டாம். மேலும், பரிகாரம் என்ற பெயரில் ஆற்றுக்குள் துணிகள் மற்றும் பிளாஸ்டிக்கை வீசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு முக்கியமான வேண்டுகோளை விடுத்தார். உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய தன்னார்வலர்களின் துணிச்சலான செயலை அருகன்குளம் பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.