திருப்பூர் அருகே கண்டெய்னரில் சிக்கிய ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என்று உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அப்போது, படப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியே வந்த கண்டெய்ணர் லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து சர்ச்சை நீடித்து வந்தது. பணப்பட்டுவாடா செய்வதற்காகவே இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டின. அப்போதைய நிலையில், கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அதன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கிளைக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியது. முதலில் இந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்ல என கூறப்பட்டது. பின்னர், இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதையடுத்து கோவையில் உள்ள ஸ்டேட்வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ-க்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ முறையான விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு முகாந்திரம் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், பிடிபட்ட ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.