/indian-express-tamil/media/media_files/2025/10/22/tn-weather-2025-10-22-10-49-44.jpg)
Tamil Nadu Weatherman Rains latest updates
வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரத்தை ஒட்டி நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியுடன் இணைந்து நிலப்பகுதிக்கு நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் மழையின் அளவு இனி படிப்படியாகக் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கனமழை பதிவுகள்:
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கடந்த 1-2 நாட்களாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவானது. சென்னையின் பல பகுதிகளிலும் அதிக மழையளவு பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் உள்ள தாழ்வுப் பகுதி இன்று அரபிக்கடல் தாழ்வுப் பகுதியின் நீட்சியில் (Trough) இணைந்து நிலப்பகுதிக்குச் செல்லும் நிலையில், கடலூர்/புதுவை பகுதியிலிருந்து சென்னை நோக்கி மேகங்கள் நகர்ந்துள்ளதாக ராடார் காட்சிகள் காட்டுகின்றன.
மழை நீடிக்கும் பகுதிகள்:
வடசென்னை புறநகர்ப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இந்தப் பகுதிகளில் உள்ள மழை மேகங்கள் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு நகரக்கூடும்.
சென்னை (KTCC) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விட்டுவிட்டு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகத்தில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் 'இழுப்பு விசை' (Pull Effect) காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை குறையும் பகுதிகள்:
டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே மழை வெகுவாகக் குறைந்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுவை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளில் இனிமேல் கனமழைக்கு வாய்ப்பில்லை; சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யலாம். மேலும், இங்கு காற்று கிழக்கு திசையில் இருந்து வீசாமல், தெற்கில் இருந்து வீசும்.
அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எச்சரிக்கை:
தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் செயல்பாடுகளை முடித்த பிறகு, அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இது குறித்து மேலும் தெளிவான விவரங்கள் இந்தத் தாழ்வுப் பகுதி முடிந்த பிறகு கிடைக்கும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
(குறிப்பு: தற்போது சூரிய ஒளி இருப்பதால், துணிகளை உலர்த்த இது சரியான நேரம். இருப்பினும், திடீரென குறுகிய கால மழை பெய்யும் அபாயம் உள்ளது.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us