திருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினா?

கருணாநிதி வகித்த பொறுப்பை நிறைவேற்ற யாரை வேட்பாளராக்குவது? என்பது திமுக.வில் விவாதமாகிறது!

திருவாரூர் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலினை நிறுத்த முயற்சிகள் நடக்கின்றன. இதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள், திமுக மேல்மட்டத்தில்!

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக திமுக தலைவர் கருணாநிதி இருந்து வந்தார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அவற்றுடன் தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் எதிர்கொள்ளவிருக்கும் பிரதான பலப்பரீட்சை இது! ஆர்.கே.நகரில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு டெப்பாசிட் இழந்த திமுக, திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் பெரும் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அல்லது எப்போது வேண்டுமானாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படும் தமிழக சட்டமன்றப் பொதுதேர்தலுக்காக முன்னோட்டம் என கருதப்படுகிறது. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல், திமுக.வின் அதிகாரபூர்வ தலைவராக மு.க.ஸ்டாலின் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்கிற பெருமைகளும் இந்த இடைத்தேர்தல்களுடன் ஒட்டிக் கொள்கின்றன.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளராக கடந்த முறை அங்கு போட்டியிட்ட டாக்டர் சரவணனே நிறுத்தப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறுகிறார்கள். அதைவிட திருவாரூரில் கருணாநிதி வகித்த பொறுப்பை நிறைவேற்ற யாரை வேட்பாளராக்குவது? என்பதுதான் திமுக.வில் பெரிய விவாதமாக போகிறது!

2016 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக சொற்ப வாக்குகளில் தோற்றது. அல்லது, சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றது. ஆனால் திருவாரூர் தொகுதிக்கு அதிகமாக பிரசாரத்திற்கே செல்லாத கருணாநிதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 68,000 வாக்குகள் வித்தியாசம்) ஜெயித்தார். இதிலிருந்து கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் அவரது குடும்பத்திற்கு அல்லது திமுக.வுக்கு எவ்வளவு அனுகூலமான தொகுதி என்பது புரியும்.

கருணாநிதி விட்டுச் சென்ற பணியை சென்டிமென்டாகவே வேறு யாரிடமும் கொடுக்க திமுக தலைமை சார்ந்த குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. தவிர, கருணாநிதி மீதான அனுதாபம் மிகுந்திருக்கும் இந்த வேளையில், அவரது தொகுதியில் போட்டியிடுவதைவிட உதயநிதிக்கு சிறப்பான அரசியல் தொடக்கம் இருக்க முடியாது என்றும் அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ, ‘மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி நுழைவை யாரும் குடும்ப அரசியலாக பார்க்கவில்லை. தயாநிதி மாறன், அழகிரி என அடுத்தடுத்து திணித்தபோதுதான் தி.மு.க.வின் இமேஜ் பெரிதாக அடி வாங்கியது.

கருணாநிதி மறைவுக்கு முன்பே சில மாதங்களாக உதயநிதியை முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் இதற்கு களத்தில் நல்லவிதமான ரெஸ்பான்ஸ் இல்லை என்பதை மு.க.ஸ்டாலின் புரிந்து கொண்டிருக்கிறார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றப் பொதுத்தேர்தலும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, திமுக எதிர்காலத்திற்கே முக்கியமானவை! எனவே இந்தத் தருணத்தில் வாரிசை நுழைத்து கட்சி இமேஜை கெடுத்துக்கொள்ள ஸ்டாலின் விரும்ப மாட்டார்’ என்கிறார்கள்.

கருணாநிதி இடத்தை திருவாரூரில் யார் நிரப்பப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close