பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சர்வ கட்சியினரும் பங்கேற்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம், இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் அதில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், பாபர் மசூதி இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த மனிதநேய மிக்க சிந்தனையாளர்களான நரேந்திர டப்லோகர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம் மற்றும் தலித் மக்களைப் படுகொலை செய்த சமூக விரோதிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகளினால் அரங்கேறிவரும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று தமிழகமெங்கும் “டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக” கடைப்பிடித்து கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்டம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம். சார்பில் அ.சவுந்தர்ராஜன், சி.பி.ஐ. சார்பில் சி.மகேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சுப.வீரபாண்டியன், மே17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் எப்.உஸ்மான் அலி, எல்.தாஹா நவீன், முஹம்மது அனிபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக கருஞ்சட்டை கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. போராட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் நூர் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திருச்சி முஹம்மத் ரபீக், நவ்ஷாத், அல்தாப் அஹ்மத் கண்டன உரையாற்றினர். திருப்பூரில் தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதேபோல மாநிலம் முழுவதும் சர்வ கட்சியினரை இணைத்து தமுமுக முன்னெடுப்பில் போராட்டம் நடந்தது.