/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-3.jpg)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை
2009ஆம் ஆண்டு, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். அந்த துர்சம்பவத்தின் நினைவேந்தல் கருத்தரங்கு சென்னை தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இலங்கைக்கு எதிராக தொடுத்த இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த நினைவேந்தல் கருத்தரங்கை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், மணிப்பூர் மாநிலத்தின் மேனாள் முதல்வர் ராதாபினோடு கொய்ஜம், அகில இந்திய காங்கிரஸின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, சமதா கட்சியின் முதன்மைச் செயலாளர் என்.ஏ.கோன், ஜம்மு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஆதித்ய குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கின் அழைப்பிதழில் பல்வேறு தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, நினைவேந்தல் கருத்தரங்கிற்கு மே 17 இயக்கம் பங்கேற்கவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-5.jpg)
பறை இசைபறை இசையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் கருத்தரங்கத்திற்கு வருகைதந்த தலைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-4.jpg)
இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியபோது, "எப்போது ஈழ பிரச்சனை வந்தாலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தான் அதை ஆரம்பித்தது போல் ஒரு வன்மம் நிலவிக்கொண்டிருக்கிறது. அது உடைக்கப்படவேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகை தந்துள்ளேன்.
2008ஆம் ஆண்டு காலகட்டங்களில் நரேந்திர மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால், அப்பிரச்சனைகளை கையாண்ட விதம் வேற மாதிரி இருந்திருக்கும். இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் சிதைக்கப்பட்ட ஒரு யாழ்ப்பாண பகுதியில் கலாச்சார மையத்தை பிரதமர் மோடி கட்டிக்கொடுத்தார். சமீபத்தில் தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து மீட்டு கொண்டுவந்தார் பிரதமர் மோடி.
மோடி வைரம் என்றாலும், அவருடைய நகர்வுகளை இங்கிருக்கும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. அதனால் அதை எடுத்துரைக்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது உக்ரைனிற்கும் இலங்கைக்கும் இருக்கும் சூழல் ஒன்று தான். ஆகையால், அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். இதுவரை இலங்கைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா நிதியுதவி செய்துள்ளது." என்று கூறுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-7.jpg)
ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் கூறியதாவது:
"முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ஈழ விடுதலை குறித்த கருத்தரங்கில், தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஈழப்பிரச்சனைகளுக்கு வெளிநாட்டு தலைவர்கள் கேட்கும் ஒரே கேள்வியானது என்னவென்றால், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதுதான்.
சிங்கள இனம் ஒரு வெறிபிடித்த இனம்; இலங்கையில் அமர்ந்த எல்லா தலைவனும் சிங்களவனாக தான் இருக்கிறான். ஈழவிடுதலைக்கான போரில், பல தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவே தன்னை சுட்டுக்கொன்ற சிங்களவனின் பெண்ணிற்கு கூட ஒரு தமிழன் இதுபோல செய்யமாட்டான்.
இந்த நிகழ்ச்சி முள்ளிவாய்க்காலை பற்றியது மட்டும் அல்ல; இதைத்தாண்டி 75 ஆண்டுகளாக வெள்ளைக்காரனிடம் விடுதலை பெற்றதிலிருந்து இன்றுவரை மூன்று லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.
வடக்கு கிழக்கு மாகாணம் என்கிற தமிழீழப் பகுதியானது, மூன்றில் இரண்டு பங்கு இலங்கையில் தமிழினமாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் தெற்கிலும் தமிழினம் இருக்கிறது. தமிழினம் என்றைக்கும் இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருக்கும். இந்தியா ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும், இலங்கை இந்தியாவுடனும் இருக்கிறது சீனாவுடனும் இருக்கிறது, ஆனால் தமிழின மக்கள் இந்தியாவுடன் மட்டும் தான் இருக்கிறோம்." என்று கூறுகிறார்.
"தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை கட்சிகளும் ஒரே குரலில் குரல் எழுப்புவோம், ஈழத் தமிழர் பிரச்சனை என்பது வேறு தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் என்பது வேறு என்ற காரணத்தால் எல்லா கட்சியினருக்கும் பாரபட்சம் இல்லாமல் அழைப்பு விடுத்தோம். அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வெளியானதையொட்டி பெரிய சர்ச்சை கிளம்பியது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயர் சேர்க்கப்பட்டதனால் பலர் கண்டனம் தெரிவித்து புறக்கணித்தனர். ஆனால் அவர்கள் பாஜக வருவதனால் மட்டும் புறக்கணிக்கவில்லை.
ஈழத்தை வாங்கிக்கொடுக்கும் இடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களால் தான் அதனை செய்ய முடியும். இந்நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் வருகைதந்துள்ளார் என்றால், அவரால் ஈழத்தமிழர்களுக்காக நீதியை பெற்று தர முடியும் என்று நம்புகிறோம்." என்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக தங்கள் கருத்தை கூறினார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-8.jpg)
உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:
"எந்த மக்கள் இனவெறிக்கு ஆளாகி அப்பாவி தமிழ் மக்களை இலங்கையில் படுகொலை செய்வதற்கு உறுதுணையாக இருந்தார்களோ, அதே சிங்கள மக்கள் அவர்களின் சொந்த ஆட்சிக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்வி இன்று உலகமுழுவதும் எழுகிறது.
1971ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்தியா அந்நிய நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் சேர்ந்து நிற்பது 52 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான். முன்யோசனையுடன் பிரதமர் எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
1954ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் பிரிவதற்கான சூழ்நிலை உருவானபோது, முன்னாள் பிரதமர் நேரு, சென்னை நகரத்தை ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பொதுத் தலைநகரமாக வைக்கக்கூறி ஒரு யோசனையாக சொன்னார். அதற்கு தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜி, காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவானந்தம் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு அந்த யோசனையை எதிர்த்தனர். அவர்களை பின்பற்றும் நாம், எல்லா கட்சியினருடனும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்நிகழ்ச்சிக்கு பங்குகொள்வது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலு சேர்த்திருக்கிறது" என்று கூறுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/Untitled-design-6.jpg)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி பேசியபோது:
"எந்த நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடை சொல்வது, எதில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக குரல் கொடுப்பது என்பதை சிந்திக்கவேண்டும். இந்த பிரச்சனை தமிழர்களுக்கானது என்று மட்டும் நான் பார்க்கவில்லை.
இந்தியாவும் இலங்கையும் 200 ஆண்டுகாலமாக வெள்ளைக்காரர்களுடைய ஆட்சியின் அடிமைப்பட்டு கிடந்தார்கள்; சுதந்திரத்திற்காக இந்தியாவும் போராடியது இலங்கையும் போராடியது. இருவருக்கும் வேறுபாடு இல்லை. ஆகையால், இந்த பிரச்சனையில் இந்திய அரசியலை புகுத்திப்பார்ப்பது சரியல்ல என்று நினைக்கிறன். எல்லோரும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இலங்கை தமிழர்களுக்காக போராடியிருக்கிறோம்.
ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை நமக்காக போராடிய நம்முடைய முன்னோர்களுக்காக திதி இடுகிறோம். அதைப்போல தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்." என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.