ஜாக்டோ-ஜியோ: தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காகஉயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆஜராகவுள்ளார்

By: September 21, 2017, 9:26:02 AM

ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆஜராகவுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், தங்களது போராட்டத்தை கைவிடாமல் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தலைமை செயலருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும், வேலை நிறுத்தத்தை உடனே கைவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஆனால், ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் தயக்கம் காட்டினர். இதனால், கடுப்பான நீதிபதிகள், ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என எச்சரிக்கை விடுத்தனர். நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையேற்ற நீதிமன்றம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரையும் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது.

அத்துடன், செப்டம்பர் 21-ம் தேதி (இன்று) ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தலைமைச் செயலர் ஆஜராகவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆஜராகவுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn chief secretary girija vaidyanathan to appear in chennai high court today on jacto geo case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X