தங்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 5-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில், 29 நிமிடம் 55.87 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். முன்னதாக, ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் இவர் ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார். அதேபோல், மற்றொரு தமிழக வீரரான ஆரோக்ய ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜூவுக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சிறு வயதில் தந்தையை இழந்த லட்சுமணன், வறுமையான நிலையிலும் தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி பெற்று, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வரும் லட்சுமணன், லண்டனில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகள போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close