scorecardresearch

அதிமுக-வை மீட்க தீவிரம்: இபிஎஸ் – ஓபிஎஸ் டெல்லி பயணம்

தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கின்றனர்.

OPS, EPS aiadmk protest against dmk and mk stalin
OPS, EPS aiadmk protest against dmk and mk stalin

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தலைநகர் டெல்லி செல்லவுள்ளனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவரது மறைவுக்கு பின்னர் இரண்டாக பிளவு பட்ட அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இயங்கி வந்தது. சசிகலா சிறை சென்றதும், அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார். கட்சி தினகரன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், காலியான அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இடைத்தேர்தல் ரத்தானது.

மேலும், அதிமுக சின்னம் மற்றும் கட்சியை முடக்கிய தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா என்ற பெயரில் தினகரன் அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக்கு பன்னீர்செல்வம் தரப்பினரும், தினகரன் தரப்பினரும் உரிமை கோரினர். இருதரப்பினரும் லட்சக்கணக்கில் பிராமானப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் தினகரன் சிறை சென்றதும், அதிமுக அம்மா அணி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சசிகலா மற்றும் தினகரனை ஓரம் கட்டி விட்டு இரு அணிகளையும் இனைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவே பன்னீர்செல்வம் தரப்பினரின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இரு அணிகளும் சில தினங்களுக்கு
முன்னர் ஒன்றிணைந்தன.

சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் கட்சிப் பணிகளில் இறங்கிய தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் அதிமுக-வில் குரல் கொடுத்து வருகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இதுவரை 23 எம்எல்-க்கள் உள்ளனர், மேலும் பல ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரம் கட்டிய பின்னும் அதிமுக-வில் பிரச்னை ஓய்ந்த பாடில்லை. மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் 11 எம்எல்ஏ-க்களை மட்டுமே தனக்கு ஆதரவாக இழுத்த நிலையில், 23 எம்எல்ஏ-க்களை தனது பக்கத்தில் தினகரன் இழுத்திருப்பது இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினரனை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சியை மீட்க தினகரன் தரப்பிலும், இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, அதிமுக-வின் மைத்ரேயன், ஜெயகுமார், தங்கமணி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை இரவு தலைநகர் டெல்லி செல்லவுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையரை இவர்கள் இருவரும் சந்தித்து அதிமுக-வுக்கு உரிமை கோருவார்கள் என தெரிகிறது.

முன்னதாக, தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி கட்சி, சின்னம் விவகாரத்தில் எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn cm deputy cm likely to go to delhi tomorrow