”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் அமைத்து அதன் மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு, அவை நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பழுதடைந்த குழாய்களை சரிசெய்வதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு கதிராமங்கலம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி காலை முதல் போராட்டம் நடத்தினர். அப்போது, எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் கதிராமங்கலம் தடியடி குறித்து திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கதிராமங்கலத்தில் குறைந்த அளவே தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மக்களில் சிலர், போலீசார் மீது கற்களை வீசினார்கள். இதில், காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், வைக்கோல்களை வழிப்பகுதியில் போட்டு அதற்கு தீ வைத்தனர்.

இதுபோன்று காவல்துறையினரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது” என்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் தலைமையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் புதன் கிழமை நடைபெற்றது. அப்போது, கதிராமங்கலம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close