அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, முதன்முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அரியலூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் கலந்துகொள்ள ஒரே விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இந்நிலையில், இரு அணிகளிடையேயும் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு அணிகளும் கடந்த திங்கள் கிழமை அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தன.
இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், அவரது அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. இரு அணிகளும் இணைந்தபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கை குலுக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, இரு அணிகள் குறித்து முறையான அறிவிப்பு வருவதற்கு முன்னரே திங்கள் கிழமையே காலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை ஆளுநர் மாளிகைக்கு வந்தார். இதையடுத்து, அன்றைய தினம் மாலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஆளுநர் முன்பு பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். மேலும், இரு அணிகளும் ஒன்றிணைந்ததை அறிவிக்கும் வகையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒன்றாக இணைத்து வைத்தார்.
இந்நிலையில், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் புதன் கிழமை மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், இணைப்புக்குப் பிறகு முதன்முறையாக ஒன்றாக பங்கேற்கின்றனர். அதற்காக, இருவரும் காலையில் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இருவரும் அரியலூர் செல்வார்கள். உடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் புறப்பட்டு சென்றார்.
இணைப்புக்கு பிறகு இருவரும் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.