பெண்கள், குழந்தைகளை தூண்டிவிட்டு மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தற்போது ‘ஃபேஷனாகி’விட்டது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அனைத்துத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, “பெண்கள், குழந்தைகளை தூண்டிவிட்டு மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தற்போது ‘ஃபேஷனாகி’ விட்டது என தெரிவித்தார். மேலும், சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சனையை தூண்டிவிடுகின்றன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அகற்றின. ஆனால், அவ்வாறு அகற்றிய மதுக்கடைகளை ஊருக்குள் அமைக்க மாவட்ட மற்றும் டாஸ்மாக் நிர்வாகங்கள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடைகளையும், ஏற்கனவே செயல்பட்டுவரும் மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குழந்தைகளும், பெண்களும் அதிகளவில் இந்த போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களை ‘ஃபேஷன்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது, மக்கள் போராட்டங்களை அவமதிக்கும் விதத்தில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, திருப்பூர் ஏ.டி.ஜி.பி. பாண்டியராஜன் பெண்கள் மீது தடியடி நடத்தினார். மேலும், ஒரு பெண்ணின் கன்னத்தில் அவர் அறைந்ததில் அப்பெண்ணுக்கு காது கேட்கும் திறன் இழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் ஏ.டி.ஜி.பி. பாண்டியராஜனுக்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இந்த நடவடிக்கையாலும், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடயே, தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டபோதும், மக்கள் தான் கலவரங்களில் ஈடுபட்டதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியது குறிப்பிடத்தக்கது.