தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ-க்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதற்கு முன்னதாக, தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று பொதுக் குழுவை கூட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் அதிமுக-வில் குரல் கொடுத்து வருகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக இதுவரை 23 எம்எல்-க்கள் உள்ளனர், மேலும் பல ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இது, இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது மாவட்ட அமைச்சர்களுடன் தன்னை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென இந்த சந்திப்பை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு முதல்வர் மாற்றினார்.
அதன்படி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் அந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசு கொறடா ராஜேந்திரன் தலைமையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கட்சியை பிளவுபடுத்த விரும்பும், ஜெயலலிதாவின் ஆட்சியை கவிழ்க்க விரும்பும் நபர்களுக்கு துணை போக வேண்டாம் எனவும் எம்எல்ஏ-க்களிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் முதல்வரை சந்தித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.