மூன்றாம் தர பேச்சாளர் போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.
இந்த இணைப்புக்கு பின்னர், அக்கட்சியில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் பழனிச்சாமியின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்ல எனவும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சில நாட்களாக இரு தரப்பினரிடையே, வார்த்தைப் போர்கள் நடந்து வருகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்து டிடிவி நீக்கி வருகிறார். ஆனால், அவரது நீக்க அறிவிப்புகள் செல்லாது என கூறி வரும், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் டிடிவி தினகரனை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தும் வருகின்றனர். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என விமர்சித்து வந்த நிலையில், டிடிவி தினகரன் மாமியார் வீட்டுக்கு போவார் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி விமர்சித்தார். முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு விமர்சிப்பது சரியல்ல என விமர்சனங்கள் எழுந்தன. அவரது பேச்சும் மிரட்டும் தொனியில் இருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய தினகரன், வீட்டிற்கு சென்றதும் அவர்கள் தான் தான் மாமியார் வீட்டிற்கு போவார்கள் என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், தனது அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மூன்றாம் தர பேச்சாளர் போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா, கருணாநிதி முதல்வராக இருந்த பதவியில் சசிகலாவால் அளித்த. முதல்வர் பதவிக்கு வந்த பிறகு யோசித்து பேசலாம். மூன்றாம் தர மேடை பேச்சாளர்கள் போல் பேசுகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் ரத்த அழுத்தம் வந்தது போல் கோபப்படுகின்றனர். மாமியார், மாமனார் வீட்டுக்கு அனுப்பவோம் என மிரட்டல் விடுக்கும் தொனியில் முதல்வர் பேசுவது அழகல்ல. அவ்வாறு பேசுவது வேதனை அளிக்கிறது.
சசிகலாவால்தான் முதல்வர், அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டாம். சசிகலாவால் பதவி பெற்றவர்கள் ராஜினாமா செய்யட்டும். திரும்பவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கட்டும்.
ஜெயலிதா மரணத்துக்கு இந்த குடும்பம் தான் காரணம் என்று கூறியவர்களுக்கு மானமுள்ளதா? சசிகலா முதல்வராக வேண்டும் என்று காலில் விழுந்து கூறியவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மருத்துவமனையில் இருந்து பன்னீர்செல்வதை முதல்வராக சசிகலா நியமித்தார் அப்போது எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் முதல்வராக பன்னீர் சரியில்லை எனக்கூறினர் என்றார்.
தான் 25 ஆண்டுகளாக சென்னையில் தான் உள்ளேன் என தெரிவித்த தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவைப் பார்க்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. நான்கு அமைச்சர்கள் சசிகலாவை பார்க்கச் சென்ற போது என்னால் இப்போது சசிகலாவைப் பார்க்க முடியாது. எனக்குப் பயமாக உள்ளது. சேகர் ரெட்டி விவகாரத்தில் நானும், என் மகனும் கைதாகிவிடுவோமோ என்ற பயம் உள்ளது என்றார். இந்த விவரத்தை சசிகலாவிடமும் கூறினேன். எந்த வழக்கிலும் சிக்காதவரை சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று சசிகலா கூறினார். இதுதான் உண்மை. சிபிஐ விசாரணைக்குப் பயந்துபோய் முதல்வரும், அமைச்சர்களும் பதற்றத்தில் உள்ளனர் என்றார்.
முதல்வர் உட்பட 122 பேர் கூவத்தூரில் ஏன் தங்கியிருந்தனர். கூவத்தூர் விடுதியில் வைத்திருந்ததால் தான் ஆட்சி நிலைத்துள்ளது. அது தவறு இல்லையென்றால், எம்எல்ஏக்கள் குடகில் தங்கியுள்ளதும் தவறு இல்லை. விதி வசத்தால் முதல்வர் நாற்காலியில் பழனிசாமி உள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க ஏன் பயப்படுகிறார்கள். முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் என்ன பயம் என்றே தெரியவில்லை. என்னை கண்டு அஞ்சத் தேவையில்லை எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.