Advertisment

நீட் விவகாரத்தில் முதல்வர் துரோகம்: மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, DMK

நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் துரோகம் இழைத்து விட்டதாக சாடியுள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழக மக்களிடம் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று என மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு நிவாரணம் கிடைக்காதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களவைத் துணைத் தலைவர் இப்படி அறிவித்திருப்பது, இதுவரை மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் “நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம்”, என்று கூறிவந்தது வெறும் ஏமாற்று நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது.

இப்போது டெல்லி போயிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வு குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டது”, என்று கூறியிருந்தார். ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ஒவ்வொரு மத்திய அமைச்சராகச் சந்தித்து நீட் தேர்வுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்”, என்று அறிவித்தார். “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார். இன்றைக்கு “நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று”, என்ற மோசமான செய்தியைத்தான் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை வெளியிட்டிருக்கிறார்.

நீட் தேர்வு செல்லுமா அல்லது செல்லாதா என்ற வழக்கு 16 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. அப்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாகத் திணித்து சமூகநீதியை சாகடித்து இருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல், தமிழகச் சட்டமன்றத்தையே அவமதித்திடும் வகையில், அடாவடியாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மேஜைக்கு அடியில் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டு நீட் தேர்வை நடத்த அனுமதியளித்தது.

“கூட்டுறவு, கூட்டாட்சி” என்று பேசிக்கொண்டே, ‘உதட்டில் ஒன்று உள்ளத்தில் வேறொன்று’ என்பதற்கொப்ப இரட்டை வேடம் போட்டு மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை எல்லாம் மீறி, நீட் தேர்வை நடத்திய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்வித்தாள் என்ற விசித்திரமான தேர்வுமுறையைக் கடைப்பிடித்தது. அதனால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், “அடுத்த வருடம் முதல் அனைத்து மாநிலத்திலும் ஒரே மாதிரி கேள்வித்தாளில்தான் நீட் தேர்வு நடத்த வேண்டும்”, என்று மத்திய அரசின் கல்வி நிறுவனத்தை (சி.பி.எஸ்.இ) உச்சநீதிமன்றமே கடிந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது ஏதோ ஒரு வன்மத்துடன் திணித்துவிட்டு, இன்றைக்கு “நீட் தேர்வுக்கு நல்ல தீர்வு காணப்படும்”, என்று மத்திய - மாநில அரசுகள் மிகப் பிரமாதமாக நாடகத்தை அரங்கேற்றி தமிழக மாணவர்களை வஞ்சித்திருக்கின்றன. 4 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, தமிழக நலன்களையம் உரிமைகளையும் அடகு வைத்துவிட்டு நிற்கும் இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு. “சிறப்பாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது”, என்று மாநில பா.ஜ.க.வினர் பாராட்டுப் பத்திரம் வாசிப்பது, இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ரகசிய உறவையும், குறுகிய நோக்கத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. 11.8.2017 அன்று மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மசோதா குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடாமல் வந்திருப்பது அதைவிட வேதனையை அளித்திருக்கிறது.

ஆகவே, கபட நாடகம் போடுவதை உடனடியாகக் கலைத்துவிட்டு, நீட் தேர்வு விவகாரத்தில் இதுவரை மத்திய பா.ஜ.க. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு மாநில அரசு வெளியிட வேண்டும். ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு மத்திய அமைச்சரிடமும் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கே ஒப்புதல் பெற முடியாத இந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை இருந்தென்ன பயன் என்ற கேள்வி தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்ய அவராகவே முன்வரவேண்டும். “நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று”, என்று அறிவித்திருக்கும் மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புகொண்டு ராஜினாமா செய்து விட்டு, முதலமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளபடியே மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமென்றால், நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Mk Stalin Dmk Thambidurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment