எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்!

சட்டமன்றத்தை உடனே கூட்டி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக அரசு தள்ளாடி வருகிறது. பிளவுபட்ட அதிமுக அணிகள் இணைந்தால் அதிமுக வலுப்பெறும் என எடப்பாடி பழனிசாமி அணியினர் கருதி வந்தனர். ஆனால், டிடிவி தினகரனோ, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை அறிவித்துவிட்டார். டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சரின் மீது நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் கடிதம் அளித்தனர்.

இதனால், தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலயில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னையில், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மைனாரிட்டி அரசு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிமுக-வை மத்திய பாஜக அரசு ஆட்டுவித்து வருகிறது. பாஜக-விடம் மண்டியிட்டுள்ள தமிழக அரசு, பாஜக-வை மீறி எந்த உத்தரவையும் எடுக்க முடியாது.

தமிழகத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இவ்வாறு இருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசு, அவர்களது பலம் என்ன என்பதை சட்டமன்றத்தில் உடனடியாக நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம், இதே அரசை ஊழல் அரசு என்று குற்றம்சாட்டினார். ஆனால், தற்போது இரு அணிகளும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். முன்னதாக ஊழல் அரசு என்று கூறிக்கொண்டிருந்த அவர், தற்போது நல்ல அரசு என்று ஒன்றாக சேர்ந்து கொண்டிருப்பது எந்தவிதத்தில் நியாயம்?

தற்போது உள்ள அதிமுக அரசு மக்களும் நம்புவதற்கு தயாராக இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே, சட்டமன்றத்தை உடனே கூட்டி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோர வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். இது தொடர்பான கோரிக்கைகை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்-க்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் என்பது சபாநாயகருக்கு கிடையாது, அந்த அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது. முன்னதாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் இல்லாத போது, தற்போது உள்ள கடிதத்திற்கு எவ்வாறு ஆளுநர் பதில் அளிப்பார் என்று கேட்டபோது, கோரிக்கை விடுப்பது எங்களது கடமை, அதனை நாங்கள் செய்கிறோம் என்று கூறினார்.

இது தொடர்பான மேலும் செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவாரா ஆளுநர்?

×Close
×Close