கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவித்ததும் பலரால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. வீட்டிலிருப்பவர்களுக்கோ திருமணம், மருத்துவம் போன்ற காரணங்களுக்காக இனி குறிப்பிட்ட இடத்துக்கு எப்படி செல்வது? யாரை அணுகுவது போன்ற பல காரணங்கள் மனதைக் குடைந்தது. ஆனால் அதற்கெல்லாம் டி.என் இ பாஸ் விடையளித்தது. இருப்பினும் அடுத்தடுத்த கேள்விகள் நம்மை டயர்டாக்கின. ஒரு டிராவல் பாஸுக்கு இத்தனை ஆழமான கேள்விகள் அவசியம் தானா என்ற சந்தேகம் எழுந்தது.
உடனே, டி.என் இ பாஸ் இணையதளத்தை வடிவமைத்த Vertace Consultants நிறுவனத்தின் சி.இ.ஓ வசந்த் ராஜனிடம் பேசினோம். “நாங்க இந்த மென்பொருளை டெவலப் பண்ணிருக்கோம். முன் பக்கத்துல நீங்க பாக்குற மாதிரி, உள்ள 2, 3 கூறுகள் இருக்கும். இ பாஸ் வேணும்ன்னு நினைக்குற மக்கள் முதல்ல ஃபோன் நம்பர், ஓடிபி வச்சு அவங்கள ’அதெண்டிகேட்’ பண்ணிக்கணும். இது மிகப்பெரிய தொற்று நோய்ங்கறதால், அவசர தேவைக்கு மட்டும் தான் மக்கள் பயணிக்க முடியும்.
இறப்பு, திருமணம், மருத்துவ தேவை, வேறு இடத்தில் மாட்டிக் கொண்டவர்கள் வீடு திரும்புதல் என 4 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன, இவையணைத்துமே தனிப்பட்ட காரணங்களுக்காக அணுகுவது. இது தவிர பல இடங்களில் சமூக இடைவெளியுடன், குறைந்த பணியாளர்களுடன் நிறுவனங்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டன. ஆகையால் பணியாளர்கள் எப்படி, எத்தனை வண்டிகளில் போகலாம் என்பது குறித்த விஷயங்களில் பொது சேவையில் இருக்கும். நிறைய பேர், எதுக்கு இவ்வளவு விபரம் கேக்குறீங்கன்னு கேக்குறாங்க. ஆனா உண்மை என்னன்னா, இதை வச்சி தான் ஹெல்த், ரெவென்யூ, போலீஸ்ன்னு எல்லாருமே இதுல இருந்து தான் ரெக்கார்டு எடுக்குறாங்க. அதனால தான் இவ்ளோ டீடெய்ல்ஸ் கேக்குறோம்.
உதாரணமா சென்னைல குறிப்பிட்ட மண்டலத்துல பாஸிட்டிவ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமா இருக்குன்னு வச்சிக்கோங்க, அங்க இருந்தவங்க எங்கெல்லாம் போனாங்கன்னு இத வச்சு தான் கண்டுப்பிடிப்பாங்க. இன்னொன்னு ஆவரேஜா ஒருநாளைக்கு 50,000 விண்ணப்பம் வருது. இதையெல்லாம் ஒரே இடத்துல அப்ரூவ் பண்றது இல்ல. ஒருத்தர் சென்னைல இருந்து திருச்சிக்கு போகணும்ன்னா, திருச்சி மாவட்ட நிர்வாகம் தான் அப்ரூவ் பண்ணுவாங்க. ஸோ இந்த விபரம் எல்லாம் அவங்களுக்கு கட்டாயம் வேணும். ஒருவேளை திருச்சில இருந்து பெங்களூர் போகணும்ன்னா, அதை ’ஸ்டேட் கண்ட்ரோல் ரூம்’ல தான் அப்ரூவ் பண்ணுவாங்க. எந்த அப்ளிகேஷன் போட்டா, எங்க போகணும், யார் அப்ரூவ் பண்ணனும்ங்கறத கவனிக்க பேக் எண்ட் டீம் இருக்கு.
தவிர எல்லா மாவட்டத்துலயும் கம்பெனிகளுக்குன்னு ஒரு மையம் இருக்கு. அதுக்கு பொதுமேலாளார் ஒருத்தர் இருப்பார். அவர் தான் இதை அப்ரூவ் பண்ணுவாரு. சுகாதாரத்துறை செயலர், ரெவென்யூ டிபார்ட்மெண்ட்ன்னு எல்லாருக்கும் இதுல இருந்து, யார் எங்கே இருந்து போயிக்காங்கன்னு டேட்டா இதுல இருந்து போகும். அதோட எத்தனை பேர் அப்ளை பண்ணிருக்காங்க, எத்தனை பேர் இடம் பெயர்ந்துருக்காங்க, எந்த இடத்துக்கு அதிகமானவங்க போயிருக்காங்கன்னு புள்ளி விபர கணக்கு, முதல்வர் மற்றும் முதன்மை செயலருக்குப் போகும்.
போலியாக இ பாஸ் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே?
ஒரு 15 நாளா இந்த பிரச்னை இருக்கு. நான் அப்ரூவ் செக்ஷன்ல இல்ல. நிறைய பேருக்கு பயம் காரணமா அவங்களோட சொந்த ஊருக்குப் போகனும்ன்னு நெனைக்கிறாங்க, ஆனா அதுக்கு அவங்கக்கிட்ட சரியான காரணம் இல்ல. ஸோ அப்ரூவ் கிடைக்கல பட் நான் போகணும்ன்னு நினைக்கிறவங்க தான் இந்த மாதிரியான செயல்கள்ல இறங்குறாங்க. அடுத்ததா இடைத்தரகர்கள் கிட்ட போறாங்க. அவங்க கவர்மெண்ட் ஆபிஸ்ல வேலை செய்ற டிரைவர், பியூன்னு யாரையாச்சும் பிடிச்சுக்குறாங்க. அந்த நபர், அப்ரூவிங் ஆபிஸர் கிட்ட சொல்லி பாஸ் வாங்கி தருவாரு. பட் இதுக்கு ஒரு 5000 ரூபாய் சைடுல வாங்கிருப்பாரு. பட் இந்த மாதிரியான அப்ரூவலையும் சிசிடிவி, மற்றும் சாஃப்ட்வேர் வச்சு நாங்க இப்போ தீவிரமா கண்காணிக்கிறோம். அதனால இந்த மாதிரியான அப்ரூவலை சிஸ்டமே பிளாக் பண்ணிடும்.
இதையும் தெரிஞ்சுக்கிட்டு வேற வழில போலி பாஸ் ரெடி பண்றாங்க. சென்னை டூ மதுரைக்கு ஒருத்தர் பாஸ் எடுத்துருக்காங்கன்னு வச்சிக்கோங்க, அத ஃபோட்டோ காப்பி எடுத்துட்டு, பேர மாத்திட்டு ஃபோட்டோ ஷாப் பண்ணிடுவாங்க. அதுல எத வேணும்ன்னாலும் மாத்தலாம். பட் அதுல இருக்க க்யூ.ஆர் கோட மாத்த முடியாது. இந்த புராஜெக்ட்ல நாங்க ஒரு ஆண்ட்ராய்டு ஆப்பும் பண்ணிருக்கோம். அந்த ஆப்ப எல்லா செக் போஸ்ட்லயும், எல்லா போலீஸ் கிட்டயும் கொடுத்துருக்கோம். அந்த ஆப் மூலமா பாஸ்-ல இருக்க க்யூ.ஆரை ஸ்கேன் பண்ணா, அது எங்க செர்வரோட கனெக்ட் பண்ணி, உண்மையான தரவுகளை எடுக்கும். நாங்க க்யூ.ஆர்-ல டேட்டாவை வைக்கல, டேட்டாவுக்கான சின்ன கீ-யை மட்டும் தான் வச்சிருக்கோம்.
சாமானியர்களால இதை கையாள முடியுமா?
இதுவரைக்கும் 35 லட்சம் அப்ளிகேஷன் வந்திருக்கு. இத வச்சி நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. தமிழ், ஆங்கிலம்ன்னு ரெண்டு மொழிலயும் முடிஞ்சளவு எளிமையா வச்சிருக்கோம். நிறுவனங்களுக்கு அப்ளை பண்றவங்க நிச்சயம் படிச்சவங்களா இருப்பாங்கங்கறதால, அங்க மட்டும் இன்னும் கொஞ்சம் ஆழமா இருக்கும். ஆனா தனிப்பட்ட முறைல ரொம்பத் தெளிவா இருக்கு.
இதையும் தவிர்த்து நிறைய பேர் அப்ரூவ் ஆகலன்னு கம்ப்ளைண்ட் பண்றாங்க. அது நம்ம கைல இல்ல. இன்னும் சில பேரு ஏன் இவ்ளோ விபரம் கேக்குறீங்கன்னு கேக்குறாங்க. உதாரணமா சென்னைல இருந்து கோவை போன ஒருத்தருக்கு கொரோனான்னா, உடனே சமந்தப்பட்ட விமான நிறுவனத்தை அணுகி விபரம் வாங்கிக்கலாம். ஆனா ரயில் அல்லது பஸ்ல போனவர்ன்னா, அதுக்கு நாங்க மட்டும் தான் ஆதாரம். அதனால தான் இவ்ளோ கேள்வி கேக்குறோம். இந்த 35 லட்சம் அப்ளிக்கேஷன்ல 90% தனிப்பட்ட நபர்கள் அப்ளை பண்ணினது தான். இல்லன்னா வீட்டுக்கொரு ஸ்கூல் / கல்லூரி மாணவர்கள் கட்டாயம் இருப்பாங்க. அவங்க மூலமா எளிதா அப்ளை பண்ணிக்கலாம். இதையும் தாண்டி தமிழகம் முழுவதும், இ-சேவை மையம் இருக்கு, அங்க நீங்க ஃப்ரீயா அப்ளை பண்ணிக்கலாம். தவிர நிறைய பிரவுசிங் செண்டர்ல கட்டணத்தோட அப்ளை பண்ணி தர்றாங்க.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.