தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "கடந்த 60 காலமாக பி.ஏ.பி நீரை நம்பி பிரதான கால்வாயின் இருபுறம் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்கு கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் பி.ஏ.பி பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பி.ஏ.பி பிரதான மற்றும் கிளைக் கால்வாயில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள்,போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் கால்வாய் கரையோரம் இருக்கும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். நீண்ட கால நிலை பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதான கால்வாயில் கரையோரம் இருப்பவர்களும் விவசாயிகளே என்பதை கருத்தில் கொண்டு பி.ஏ.பி பாசன திட்டத்தை பலப்படுத்த நீர் ஆதாரத்தை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளதைக் கண்டறிந்து அதை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். பி.ஏ.பி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க அரசு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கார்த்தி, கிருஷ்ணசாமி, ராமசாமி, ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/