ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேபோல், தீவிரவாதிகளுடன் நடைபெற்ற இந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உள்பட இருவர் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்தவர். பெரியசாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில், வீரமரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சிவகங்கை மாவட்டம் கண்டனி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜாவின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.