Chennai Tamil News: செப்டம்பர் 28ஆம் தேதி (புதன்கிழமை) அன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழக அரசு மருத்துவர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
கலைஞரின் அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், உண்ணாவிரதம் மேற்கொள்ள போகிறதாக தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தைப் பற்றி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது:
“அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். அதை 2017ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு அமுல்படுத்தி, அதற்கான பணபலன்கள் (Arrears) தரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்போராட்டக் குழு (LCC) வழக்கு தொடர்ந்துள்ளது.
நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு மருத்துவர்களுக்கு ஏற்கனவே 20 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திடும் வகையில் காலம் சார்ந்த ஊதியம் (DACP) வழங்கப்படுவதாகவும், இது தமிழகத்தில் டாக்டர்களை தவிர வேறு எந்த துறையினருக்கும் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊதியப்பட்டை நான்கை முன்னதாகவே (Compression of years) தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் நீண்டகால மற்றும் கடினமான படிப்பு, அரசுப் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள்
ஆகியவற்றை கருத்தில் கொண்டு DACP ஊதியம் நாடு முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கும், பல்வேறு மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்கி வருகிறது.
அதுவும் நம் நாட்டில் மத்திய அரசு மருத்துவர்களுக்கும், கர்நாடகா, பாண்டிச்சேரி, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் MBBS மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு, முறையாக 13 ஆண்டுகள், 6 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே சிறப்பு மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் 20 ஆண்டுகளில் தரப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவர்கள் தங்களை ‘வருத்திக் கொள்ள வேண்டாம் என்றும், அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசாணை 354 ஐ அமுல்படுத்துவோம்’ என உறுதியளித்தார்கள். இருப்பினும் இன்று வரை அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் டாக்டர் எழிலன்,M.L.A., மற்றும் திரு. சின்னதுரை,M.L.A., அரசாணை 354 ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி பேசினார்கள். ஏற்கனவே சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்கள் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற பலமுறை அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுவாக ஒரு பணியாளருக்கு அடிப்படை ஊதியம் என்பது தான் கௌரவமான சம்பளம். அரசாணை 354 அதை உறுதி செய்கிறது. மேலும் அடிப்படை ஊதியத்தில் தரப்படும் உயர்வு, அகவிலைப் படி முதல் ஓய்வூதியம் வரையில் மதிப்பு கிடைக்கும் வகையில் பிரதிபலிக்கிறது. ஆனால் அரசாணை 293 மூலம் தரப்படுவதாக சொல்லப்படும் ஊதியப் படிகள் மிக, மிக குறைவாகவே உள்ளது. அதாவது 40 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியத்திற்கு மாற்றாக 5 ஆயிரம் ரூபாய் ஊதியப் படிகள் என்பது எவ்வளவு பெரிய அநீதி என்பது நன்றாகவே தெரியும். மேலும் அரசாணை 293 மூலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
இதை புரிந்து கொண்டு தான் கலைஞர் அரசாணை 354 ஐ வெளியிட்டார். கலைஞரின் அரசாணையையே திருத்தி எழுதும் அளவிற்கு இங்கு யாரும் இல்லை என கருதுகிறோம்.
ஈ.சி.ஆர்., சாலைக்கு கலைஞர் பெயரை சூட்டியது, கலைஞருக்கு சிலை வைப்பது, கலைஞர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருவது என கலைஞரை பெருமைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. அதேநேரத்தில் 2009 ல் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354 ஐ புறக்கணிப்பது என்பது 19 ஆயிரம் அரசு மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மருத்துவக் கல்வி இயக்குநர், அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கங்கள் தான் 2019 ல் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளது என்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அன்று 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக முந்தைய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒரு வார காலத்துக்கு வேலைநிறுத்தம் செய்த நிலையில், இதை எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மருத்துவர்களின் போராட்டம் என்று சொல்ல முடிகிறது என்ற கேள்வி எழுகிறது.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்/ Advocate General நீதிமன்றத்தில் ஒரு affidavit ஐத் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதில்,
” இந்த வழக்கு 1657/21 அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு.
அரசாணை 354 கலைஞர் வெளியிட்ட அரசாணை என்பதால், அதை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கொள்கையும், நிலைப்பாடும்
எனவே திமுக அரசின் உறுதிமொழியாக நீதிமன்றம் இதைப் பதிவு செய்து கொண்டு, வழக்கை முடித்து வைக்க வேண்டும். விரைவில் அரசு ஆணை 354 ஐ அமல்படுத்த அரசு உத்தரவிடும். “
என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.
எனவே இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே, கலைஞரின் அரசாணையை நடைமுறைப்படுத்த போவதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பதோடு, அரசு மருத்துவர்களின் ஊதியப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டுகிறோம். இதன் மூலம் மருத்துவர்களை மேலும் உற்சாகமாக பணி செய்ய வைப்பதோடு, சுகாதாரத் துறையை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil