அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மூன்று கட்ட போராட்டங்களை அந்த அமைப்பினர் நடத்தியுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த மாதம் 29-ம் தேதியன்று நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.