பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவைக் கோட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரை மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் தரப்படவில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் நிலவும் நிதி நெருக்கடி என்பது நேற்று முன்நாள் உருவாகி, நேற்று விஸ்வரூபம் எடுத்தவை அல்ல. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் வேதனையாகும். அண்ணாமலைப் பல்கலைகக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் நியமிக்கப்பட்டதால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காரணம் காட்டித் தான் அப்பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக் கொண்டது. அங்கு நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே தனி அதிகாரியை அரசு அமர்த்தியது. ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
தனி அதிகாரியாக சிவதாஸ் மீனா என்ற இ.ஆ.ப. அதிகாரி இருந்தவரை தமிழக அரசிடமிருந்து கூடுதல் நிதியை வாங்கி செலவுகளை சமாளித்தார். அவர் அந்த பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்குவதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. அதனால் நிதி நெருக்கடி நீடிக்கிறது. ஆசிரியர்கள் கல்வி தானம் வழங்குகிறவர்கள். ஒவ்வொரு மாதமும் ஊதியத்திற்காக அவர்களை அரசு கையேந்தி நிற்க வைப்பது கொடுமையானதாகும். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிக பணியாளர்கள் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்று கூறினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை மோசமடைந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் செலவுகளை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் குறைப்பதும், வருவாயைப் பெருக்குவதும் தான் இச்சிக்கலுக்கு தீர்வாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக அதை பன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவது உட்பட ஏராளமான ஆக்கப்பூர்வயோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.
தமிழக அரசு தலையிடுவதன் மூலம் செப்டம்பர் மாத ஊதியம் சில நாட்களில் கிடைத்து விடலாம். ஆனால், நிதி நெருக்கடி நிரந்தரமாக தீர்க்கப்பட்டால் தான் ஆசிரியர்களும், ஊழியர்களும் எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு தீர்வு காண முடியும். நிதி நெருக்கடியால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்களின் செயல்பாட்டுத் திறன் குறைவதை அரசு உணர வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான உத்திகள் வகுத்து செயல்படுத்தப்படும் வரை பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அந்தக் கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல், நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊதியம் தரவும், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கவும் நிதி இல்லாமல் போக்குவரத்துக் கழகங்கள் திணறுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளும், இழப்பை சமாளிக்கத் தேவையான மானிய உதவியையும் தமிழக அரசு வழங்காதது தான் இதற்குக் காரணமாகும். போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்கியும், இழப்பு மானியம் அளித்தும் போக்குவரத்துக் கழகங்கள் சீராக இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.