கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு ஒழுங்காக தூர்வாரியிருந்தால், நிச்சயம் சென்னையில் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கியிருக்காத நிலை உருவாகி இருக்கும். ஆனால், இந்த ஆட்சி தூர்வாரவில்லை. அது பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கிறது. இந்த பொதுப்பணித்துறை முதல்வர் பழனிசாமி தலைமையின் கீழ் தான் உள்ளது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆகவே, கொளத்தூர் பகுதியை பொறுத்த வரையிலே, மாநகராட்சி சம்பந்தப்பட்டுள்ள பல்வேறு வார்டுகளில், சாதாரணமாக மழை பெய்தால் எங்கெங்கு தண்ணீர் தேங்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்து, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
அதுபோல், கழிவுநீர் உந்தும் நிலையம் (Pumping Station), சென்ற டிசம்பர் மாதம் தாக்கிய வர்த்த புயல் நேரத்தில், பல Pumping Station செயல்பட முடியாத நிலையில் இருந்தது. இந்தமுறை அது போன்றதொரு குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், நானே நேரடியாக பல பகுதிகளுக்கு சென்று இன்று பார்வையிட்டு வந்திருக்கிறேன். அதையும் தாண்டி, இந்த கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட, திமுகவின் வட்ட அளவில் இருக்கக் கூடிய நிர்வாகிகளை அழைத்து, அவர்களிடத்திலும் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு பக்கபலமாக துணை நின்று உதவ வேண்டும் என தெரிவித்து இருக்கிறேன். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுங்கள் என்றும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களும், தொடர்ந்து அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் ஒரு நாள் பெய்த மழைக்கே மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதல் அளித்த ஸ்டாலின், வர்தா புயல் வந்தபோதும் இந்த நிலை இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போதும் இந்த நிலை வந்தது. அதிலிருந்து இவ்வளவு காலத்திற்குள் அந்தப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. ஆனால், இப்போது இருக்கக் கூடிய ஆட்சி, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களது கவலை எல்லாம், இந்த மைனாரிட்டி ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது, எம்.எல்.ஏ.க்களை எப்படி சரி செய்வது, சில அமைச்சர்களை எப்படி மற்ற அணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவது, அதற்கு எவ்வளவு பெர்செண்டேஜ் கொடுக்கலாம், எவ்வளவு கமிஷன் கொடுக்கலாம் என்ற அந்த கவலையில் தான் இந்த குதிரை பேர ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது என்றார்.
கிரானைட் விவகாரத்தில் அரசு சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இது அரசு நியமித்த கமிஷன். சகாயம் கொடுத்த ரிப்போர்ட்டையே எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். இது எதை காட்டுகிறது என்றால், இன்று டிஜிபியாக இருக்கக்கூடிய ராஜேந்திரன் குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார். ஆக, அவரையே டிஜிபியாக நியமித்து இருக்கிறார்கள். எப்படி இது போய்க் கொண்டிருக்கிறதோ, அது போன்று சகாயம் கமிஷனின் அறிக்கையை மறைக்கும் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, இந்த மைனாரிட்டி ஆட்சிக்கு பக்கபலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.