காவிரி பிரச்சனையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என காவிரி தொடர்பான வழக்கில் தமிழக அரசு மத்திய அரசின் மீது கடும் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தாங்களே தொடர்ந்து விசாரிப்போம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தண்ணீருக்காக இரு மாநிலங்கள் சண்டையிடுவதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், நதிநீருக்காக இரு மாநிலங்கள் மோதிக்கொள்வது சரியானது அல்ல எனவும் தெரிவித்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதாடி வருகிறார். இந்த வழக்கு கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தன் வாதங்களை 17-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, இறுதி விசாரணையை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவிரி பிரச்சனையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழக அரசு தன் இறுதிவாதத்தில் குற்றம்சாட்டியது. வானளவு அதிகாரங்கள் இருந்தும் அதனைப் பயன்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது எனவும் தமிழக அரசு வாதாடியது. மேலும், காவிரியில் புதிய அணைகள் கட்டும்போது தமிழக அரசிடம் கர்நாடகம் அனுமதி கேட்பதில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியது.