Advertisment

தி.மு.க பேச்சாளர் மீது ஆளுநரின் செயலாளர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல்

தமிழ்நாடு ஆளுநரை அவதூறாக விமர்சித்த தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தி.மு.க பேச்சாளர் மீது ஆளுநரின் செயலாளர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல்

தமிழ்நாடு ஆளுநரை அவதூறாக விமர்சித்த தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையில், சில பகுதிகளை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் படித்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் விமர்சித்துப் பேசினார். இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே, தமிழகம் - தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநரின் முதன்மை செயலாளர், தி.மு.க தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment