டெங்கு காய்யச்சல் குறித்து கவலையில்லாமல், ஆட்சியை தக்க வைப்பதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசின் செயல்பாடு மோசமானதாக இருக்கிறது.
மத்திய அரசின் குழு தமிழகத்தில் தாமதமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. டெங்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தான் இருக்கிறது. மழை காலம் தொடங்கும் முன்னர், இதுபோன்ற தடுப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா. ஒரு சதாரண மருத்துவமனையில் ரூ.2000 வைத்துக்கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் சிகிச்சை பெற முடியுமா?
டெங்கு காய்ச்சலுக்காக போராட்டம் நடத்துவதால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. தற்போது இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டவே தமிழக அரசு விரும்புகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் ஆட்சியை பாதுகாப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கின்றனர்.
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமா என்ற கேள்விக்கு விஜயகாந்த் பதிலளித்த போது: அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமல்ல. ஆனால், பொதுமக்களை இந்த காய்ச்சலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். ஆர்.கே நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று கூறினோம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று விஜயகாந்த் கூறினார்.