அரிசி குடும்ப அட்டைதாரர்களுகு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கடந்த ஆண்டு இடம் பெற்ற கரும்பு வருகிற பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் இடம்பெறாததால் விவசாயிகள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழர் திருநாளம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொன்க்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இத்தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே, 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வருகிற பொங்கல் பண்டிகைக்கு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு இடம்பெறவில்லை என்று விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்பு இடம்பெற்றிருந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு 'மிஸ்' ஆகியுள்ளது. இதனால், விவசாயிகள் தரப்பில் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தெரிவித்துள்ளனர்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுகு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கடந்த ஆண்டு இடம் பெற்ற கரும்பு வருகிற பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் இடம்பெறாததால் விவசாயிகள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: பொங்கல் திருவிழா என்பது உழவர் திருநாள், தமிழர் திருநாளாகும், உழவர் திருநாளின் அடிப்படை நோக்கம் உழவர்களுடைய உற்பத்திப் பொருட்களை வைத்து வணங்குவது. அதற்கு மூல காரணமாக இருக்கிற கால்நடைகளை வணங்குவது. உற்பத்திப் பொருளை லாபகரமாக விற்பனையாக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளப்படுகிறது. இப்படி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிற ஒரு விழா. அந்த பொங்கலுக்கு உழவர்கள் உற்பத்தி செய்கிற பொருளைத்தான் பரிசுப் பொருளாகக் கொடுப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் கரும்பையும் அதில் வழங்குவது. கரும்பு பயிரிடுகிற விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அந்த திட்டத்தை ஆதரித்தார்கள்.
அதுமட்டுமில்லாமல், பொங்கல் விழாவினுடைய அடிப்படை நோக்கமே கரும்புதான். அந்த கரும்பை நீக்கிவிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கிறார்கள். இதை எந்த அடிப்படையில் முன்னெடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. அரசியல் உள்நோக்கங்களுடன் இந்த திட்டம் அறிவிக்கப்படுமேயானால், அதன் அடிப்படை நோக்கமே சிதைந்துபோய்விடும். விவசாயிகளின் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தில் கரும்பை நீக்கி விட்டு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது. இந்த பரிசுப் பொருளின் நோக்கமே சிதைந்துபோய்விட்டது. தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை சேர்த்து அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசை நம்பி கரும்பு பயிரிடுகிற விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் ஈடு செய்வது. உழவர் திருநாளில் கரும்பை விளைவிக்கிற விவசாயிக்கு தமிழக அரசு ஏமாற்றம் அளிக்கக்கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.