Advertisment

தனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கினால் ஏழை மாணவர்கள் பாதிப்படைவார்கள் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம்  இடங்களையும்,  சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65 சதவீதம்  இடங்களையும் கலந்தாய்வு மூலம் அரசு நிரப்புகிறது. 

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் கலந்தாய்வு முடியும் போது  லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன. இந்த  இடங்கள் கடைசி நேரத்தில் தனியார் கல்லூரிகளுக்கே திருப்பி அளிக்கப்படுவதால், அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடபகிர்வு முறையை மாற்றி அமைக்கவும், அதுவரை பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் கோரி திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே, அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகளே நிரப்பக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை பொறியியல் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி பொறியியல் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கியதோடு இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது நடைமுறையில் உள்ளபடி, ஒற்றை சாளர முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தினால் மட்டுமே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விளையாட்டு வீரர்கள்,  மாற்றுத்திறனாளிகள்,  ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள்  மற்றும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை மாணவர்கள் முழுமையாக பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு இல்லாமல் தனியார் பொறியியல் கல்லூரிகளே மாணவர் சேர்க்கை நடத்தினால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைமுறைகள் தற்போது  தொடங்கப்பட்டு விட்டதால், தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Medras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment