காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பியதையடுத்து, 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பெரிய ஏரியான இது முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 23.30 அடி. தற்போது தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், ஏரியில் 20.5 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால், மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது
இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள 21 கிராமத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கத்திரிச்சேரி, விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், முருக்கச்சேரி, தச்சூர் உள்ளிட்ட வலது கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், மேட்டுக்காலனி, இருசாமநல்லூர் உள்ளிட்ட இடது கரை கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மக்கள் உடனடியாக அந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தை அருகில் நின்று பார்க்கவோ, போட்டோ எடுக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.