இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யும். வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மழையின் அளவைப் பொறுத்து ஆட்சியர்கள் விடுமுறையை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட திருச்சியில், இன்று மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்டன. அந்தத் தேர்வுகள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகங்கள் இன்றும் தேர்வை ரத்து செய்துள்ளன. மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.