கடந்த 27-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு தண்ணீர் புகுந்திருப்பதால், பலரும் தங்களது இருப்பிடங்களை காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இதனால், தமிழக அரசு மீது கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சமூக தளங்களில் பலரும் அரசை கேலி செய்யும் விதத்திலும், அமைச்சர்களை கிண்டல் செய்யும் விதத்திலும் மீம்ஸ்களை போஸ்ட் செய்து வருகின்றனர். சிலர் நேரடியாக விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறையினரை பாராட்டியும், தமிழக அரசுக்கு உதவி செய்யக் கோரியும் ட்வீட்டியுள்ளார். இதுகுறித்து அவர், "காவல்துறையினர், தங்களது பணியினையும் தாண்டி, மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருவதற்கு பாராட்டுகள். நல்ல குடிமகன் என்பவர், சீருடை அணிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒளிர்வார். காவல்துறையினரை போல இதுபோன்ற மீட்புப் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பலரும் கமல்ஹாசனின் இந்த ட்வீட்டை வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர். 'மழையால் பாதித்த இடங்களுக்கு சென்று இவர் பார்க்காமல், மக்கள் படும் துன்பத்தை நேரில் சென்று அறியாமல், வீட்டில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை நிவாரணப் பணிகளில் ஈடுபட சொல்கிறாரே' என்று சில சமூக தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 1-ஆம் தேதி ட்விட்டரில் கமல் வெளியிட்டிருந்த பதிவில், "நன்மங்கலத்திலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் 2015லேயே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும் இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவ வேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம். இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.