மருத்துவப் படிப்புக்கு மாணவ - மாணவிகளை தேர்வு செய்ய ‘நீட்’ எனும் புதிய தேர்வு முறை குறித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு மத்திய பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ- மாணவிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். +2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் கூட நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அவர்களில் மருத்துவர் கனவு கண்ட பலரது கனவு சிதைந்தது.
குறிப்பாக, அரியலூர் மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களுடன் 196.75 கட் ஆஃப் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வு முட்டுக்கட்டை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்தார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 534 மருத்துவ இடங்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்த 2 ஆயிரத்து 314 பேருக்கு இடம் கிடைத்தது. அதில், 2 ஆயிரத்து 309 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மீதமுள்ள ஐந்து பேர் மட்டுமே தமிழக அரசுப் பள்ளியில் படித்து இடம் கிடைக்க பெற்றவர்கள் ஆவர்.
இதனால், தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை விவசாயிகள் தொழிலாளர் கட்சி, த.மு.மு.க. ஆகியவை சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஸ்டாலின், "நீட் தேர்வுக்கு பயிற்சிப் பெற தனியார் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் 3 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள். இப்படி தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு மத்திய அரசு நீட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒத்துப் போகிறது. தற்போதைய தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். நான் இங்கு பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்குவதற்கு முன்பாக கூட கவிழ்ந்து விடலாம். எனவே, இந்த கண்டன பொதுக் கூட்டம் தான் தற்போதைய தமிழக அரசுக்கு எதிரான நமது கடைசி போராட்டமாக இருக்கும்" என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன் திருநெல்வேலியிலும், முத்தரசன் திருவாரூரிலும் வீரமணி, திருமாவளவன் ஆகியோர் வட சென்னையிலும், கனிமொழி வள்ளுவர் கோட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.