மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி, சென்னை பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஜி.எஸ்.டி. தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்தார். அவருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் வந்திருந்தார். முன்னதாக, அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி 12 மாணவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அருண் ஜெட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதே சமயம் சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கு படிக்க வந்த மாணவர்களையே தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்திருப்பதாக மாணவர்கள் சிலர் முகநூலில் பதிவிட்டனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் ஒருவர் முகநூலில் இதுகுறித்து பதிவிட்டதாவது, ”சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கும் நூலகத்திற்கு படிக்க வந்த வந்த பல்கலைக்கழக மாணவர்களை திறந்தவெளி கைது செய்திருக்கும் காவல்துறையினர்”, என வீடியோ வெளியிட்டார்.
அதேபோல், மாணவியின் பதிவொன்றில், ”அருண் ஜெட்லி வருகையின் காரணமாக, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் உள்ளே சிறைப் பிடிக்கப்பட்டனர்.”. என குறிப்பிட்டார்.