Advertisment

மாணவி அனிதா தற்கொலை LIVE UPDATES: உடல் தகனம் செய்யப்பட்டது

நீட் தேர்வை எதிர்த்த அரியலூர் மாணவி அனிதாவின் உடல், அவரது வீட்டின் வெளியே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாணவி அனிதா தற்கொலை LIVE UPDATES: உடல் தகனம் செய்யப்பட்டது

இரவு 11:00: மாணவி அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

Advertisment

இரவு 09:00: மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், திமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியையும் ஸ்டாலின் வழங்கினார்.

publive-image

இரவு 08:00: மாணவி அனிதா இல்லம் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று மாணவர்கள் போராட்டம்.

மாலை 06:30: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயற்சி.

மாலை 06:10: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் இல்லத்துக்கு சென்ற டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மாலை 06:00: அனிதாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

மாலை 05:10: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம். நீட் வழக்கில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வாதாடியவர் நளினி சிதம்பரம்.

publive-image

 

பிற்பகல் 3:25:மாணவி அனிதா மரணத்தைக் கண்டித்து சென்னையில் பாஜக அலுவலகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதியம் 01:58: “தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. அப்படியே நீட் தேர்வு நடத்தினாலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் அல்லாமல், மாநில பாடத்திட்டத்தின் பிளஸ் டூ பாடங்களின் அடிப்படையில் கேள்வித்தாள்கள் இருக்க வேண்டும்”, என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

publive-image

மதியம் 01:26:மாணவி அனிதாவின் உடலுக்கு திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த அரசு யாருக்கான அரசாக உள்ளது”, என கேள்வி எழுப்பினார்.

publive-image

இதேபோல், இயக்குநர் கௌதமனும் மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல், நீதி உள்ளிட்ட துறைகளிலும் நீட் தேர்வை புகுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது”, என குற்றம்சாட்டினார்.

publive-image

மதியம் 1:21: ”இன்று நடைபெறும் அதிகாரப்பசிமிக்க அரசாங்கத்தால் நமது மாநில நலன்கள் பலி கொடுக்கப்பட்டு நீதி நிலைநாட்ட படாமல் சுயாட்சி உரிமையை இழக்க தொடங்கியதின் வெளிப்பாடே இன்றைய மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம்.”, என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிக்கை வெளியிட்டார்.

Anitha, NEET, Deepa

மதியம் 01:10: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் அனிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்தி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதியம் 1:00 செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை செல்லூர் ராஜூ, “மாணவி அனிதாவின் மரணத்திற்கு தமிழக அரசு இழப்பீடு கொடுத்தலும், அவரது உயிருக்கு ஈடாகாது”, என தெரிவித்தார்.

publive-image

மதியம் 12:43:அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது”, என கூறினார்.

மதியம் 12:40:”அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருபவர்கள் அமைதி காக்க வேண்டும்.

அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஆனால், சோதனைக்குப் பின்பே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

மதியம் 12:38:இடதுசாரி மாணவ அமைப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்ன அண்ணா சாலையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம் 12:34:சேலம் பெரியார் மேம்பாலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் பூந்தமல்லி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், வாலாஜா சாலையில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், கோவையில் வழக்கறிஞர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

மதியம் 12:20:மாணவி அனிதாவின் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்தார்.

காலை 11:15: மாணவி அனிதாவின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

காலை 10:04: திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ”நீட் எனும் சமூக அநீதிக்கான போராட்டத்தை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும்.”, என சுப. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்னணி:

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கிறார். அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். 196.5 கட்- ஆஃப் கொண்டிருந்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வெழுதினார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடியவர் அனிதா.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை இயற்றியது.

ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மாணவி அனிதா எதிர்மனுதாரராக தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும், அந்த வழக்கில் தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நீட் தேர்வின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டம் முழுதும் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகலில் அனிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Neet Supreme Court Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment