பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கேளிக்கை வரி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தமிழக அமைச்சர்களுடன் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படங்களுக்கு 28% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக உள்ளாட்சிகளுக்கான கேளிக்கை வரி 30%-ஐ திரையுலகினர் செலுத்தி வருகிறார்கள்.

இதனால், மொத்தம் 58% வரி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இது, சிறு பட்ஜெட் திரைப்படங்களை பாதிக்கும் எனவும், லட்சக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்த்து வந்தனர். இதனால், கடந்த திங்கள் கிழமை முதல் இன்று வரை 4 நாட்களாக மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கேளிக்கை வரி 30%-ஐ ரத்து செய்யக்கோரி கடந்த திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கேளிக்கை வரி ரத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளதுதான் எனவும், ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை இரட்டை வரியாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரியை ரத்து செய்ய இயலாது என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து இன்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதில் தான் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வீரமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

4 நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கேளிக்கை வரி ரத்து இல்லை என எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கூறியிருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது.

இந்நிலையில், மாலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வீரமணி, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு சார்பில் 6 பேர் கொண்ட குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் 8 பேர் கொண்ட குழுவும் அமைக்க முடிவெடுக்கப்பட்டதையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், நாளை காலை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close