Advertisment

தாவி வந்த வி.ஐ.பி-களுக்கு 'அல்வா': நெல்லையில் ஸ்டாலின் சாய்ஸ் யார்?

மொத்த வார்டுகளான 55 வார்டுகளில் குறைந்தது 45 வார்டுகளை பெற்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் நெல்லை மாநகராட்சியை கைப்பற்றுவோம் என்று உறுதியுடன் சொல்கின்றனர் திமுகவினர்.

author-image
WebDesk
New Update
TN urban local body elections 2022

TN urban local body elections 2022

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி,  மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்து விட்டன.  இதில் ஆளுங்கட்சியான திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது. அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில்  வரும் 19ம் தேதி  பஞ்சாயத்து தலைவர், நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டு  தேர்தல் பிரச்சாரமும்  முழு வேகத்துடன் நடக்கிறது.  வெற்றிக்கான போர் தொடங்கியாகி விட்டது. முக்கியமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் முண்டா முடிச்சுகளோடு களம்  இறங்கியுள்ளன.

Advertisment

சாதிக்கும், வன்முறைக்கும் பஞ்சமே இல்லாத  நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும்  செம மல்லுக்கட்டு தொடங்கி விட்டது. இந்த முறையும்   பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட  நெல்லை மாநகராட்சி’ சென்ற மாதம் பொதுத் தொகுதியாக  அறிவிக்கப்பட்டதில் இருந்து யார் மேயராவது என்பதில் ஆளுங்கட்சியான திமுகவில்  நடக்கும் யுத்தம்  இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

கடந்த 1996 ல் தொடங்கப்பட்ட நெல்லை மாநகராட்சி தென்மாவட்டங்களில்  பழமையான மாநகராட்சிகளில் ஒன்று.  நெல்லையின்  முதல் மேயராக திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார். அடுத்தடுத்து நடந்த 2001, 2006, 2011, 2016 தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த ஜெயராணி, திமுகவை சேர்ந்த ஏ எல் சுப்பிரமணியன், அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த், அதிமுகவை சேர்ந்த புவனேஸ்வரி என  மாறிமாறி  பலரும் மேயர் இருக்கையை அலங்கரித்த நிலையில் தான் நெல்லையில்  அடுத்த மேயர் யார் என்ற கேள்வி பிறந்திருக்கிறது.

நெல்லை மாநகரை பொறுத்த வரையில் திமுக, அதிமுக என  இரு பிரதான கட்சிகளுக்குமே  சமமான வாக்கு வங்கி உண்டு. ஆனால் ஜெயலலிதா காலத்துக்கு பிறகு’ தனித்தலைமை இல்லாமல் இரட்டை தலைமையுடன் நடமாடும் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்து விட்டது. இதற்கு நடந்து முடிந்த  ஊரக உள்ளாட்சி தேர்தல்களே உதாரணம். 55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  நான்கு லட்சத்துக்கும் அதிகம். ஏழு கட்சிகளின் ஆதரவுடன்  திமுக வலுவாக நிற்கும் நிலையில்  திமுகவை தன்னந்தனியாக எதிர்த்து நிற்கிறது அதிமுக.  இறுதிக்  கட்ட திருப்பமாக  அதிமுக கூட்டணியில் இருந்து  விலகிய பாஜக, தேமுதிக , தவிர சில சாதிக் கட்சிகளும்  களத்தில்  இருக்கின்றன்.   

நெல்லை மாநகராட்சியில் பிள்ளைமார் சமூக மக்களே அதிகளவில் வசிக்கின்றனர். ஆனால் நடந்து  முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிள்ளை இனத்தை சேர்ந்த ஏ எல் எஸ் லட்சுமணனை,  தேவர் இனத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். நெல்லை மாநகராட்சியில் இதுவரை தேவர் இனத்தை சேர்ந்த யாருக்குமே மேயர் பதவி கொடுக்கப்படாததால்’ இந்த முறையாவது தேவர் இனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது  தேவர் இனத்தவரின் கோரிக்கை. இந்த கோரிக்கைக்கு திமுக தலைமையில் இருந்தது என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை எதிர்நோக்கியுள்ளனர் தேவர் அமைப்பினர்.

இதற்கு பல்வேறு காரணங்களை சொல்கின்றனர் தேவர் பிரமுகர்கள். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பக்க பலமாக இருந்தது தேவர் இனத்தவரின் வாக்குகள் தான். அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்த வாக்கு வாங்கி திமுகவிடம் தான் இருந்தது. முக்கியமாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு தேவர் இனத்தவரின் பெரும்பான்மை வாக்கு வங்கி’ அதிமுக பக்கம் நகர்ந்தது. இதை மனதில் கொண்டு தான் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் தேவர் பிரமுகர்கள். தென் மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் சபையில் அமரும் அந்தஸ்து கொண்ட இந்தப் பதவியும் தேவர் இனத்திற்கு வழங்கப் படவில்லை. இதை எங்களால் நிரூபிக்க முடியும். குமரி மாவட்டத்தில் அமைச்சர் பதவி’ நாடார் இனத்தை சேர்ந்த மனோ தங்கராஜுக்கு வழங்கப் பட்டுள்ளது.  சபாநாயகராக இருக்கும்  அப்பாவு நெல்லை  மாவட்டத்தை சேர்ந்தவர்.  அவரும் நாடார் இனத்தை சேர்ந்தவர் தான். அப்படியே தூத்துக்குடிக்கு வந்தால் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் இருவரும் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள். இப்படி அனைத்து பொறுப்புகளும் நாடார் இனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன.

நெல்லை மாநகராட்சியில் இதுவரை மேயர் பதவியை கூட எந்த கட்சியும் தேவர் இனத்திற்கு  வழங்கவில்லை. இது இப்படியே போனால் எங்கள் இனம் திமுகவுக்கு எதிரான இனமாக கருதப்படும் என்பதை முதல்வருக்கு அறிவித்துள்ளோம். எங்கள் இனத்தை கௌரவப்படுத்தும் வகையில் தகுதியான தேவர் பிரமுகருக்கு மேயர் பதவியை திமுக அரசு வழங்க வேண்டும் ஏற்றுக் வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையும் திமுக அரசு அதை மதிக்க விட்டால் அடுத்த தேர்தலில் நாங்கள் யார் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என சொல்கின்றனர் தேவர் அமைப்பினர். இதை கருத்தில் கொண்டு தான் திமுக தலைவர் அனைத்து சாதியினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று பேசியதாகவும் ஒரு தகவல் உண்டு.

திமுக  அணியில் முதன்மை கட்சியான திமுக  47 வார்டுகளிலும், காங்கிரஸ்  3 வார்டுகளிலும்  மதிமுக  2 வார்டுகளிலும்  சி பி ஐ  மற்றும் மனிதநேய  மக்கள் கட்சி தலா ஒரு  வார்டிலும் போட்டியிடுகின்றன. அவர்களை எதிர்த்து  அனைத்து வார்டுகளிலும்  புதுமுக அதிமுக வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். காரணம் அதிமுகவின் பிரபலங்கள்  மற்றும் முன்னாள்  மேயர்கள்  என அனைவரும்  ஆளுங்கட்சியான  திமுகவில் ஐக்கியமாகி விட்டது தான்.

திமுகவின்  47 வேட்பாளர்களையும் தனது பரிந்துரையுடன் வேட்பாளராக்கி  இருக்கிறார்  நெல்லை  மத்திய  மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்.  தனது செல்வாக்கை நிலை நிறுத்த அவர் வகுத்த வியூகத்தில்  நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மகன்  பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா  போன்ற விஐபிக்கள்  கூட தப்பவில்லை. முன்னாள் எம்எல்ஏ  மற்றும் சபாநாயகர் ஆவுடையப்பனின் அதிரடி அரசியல் பற்றி தனது ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட அப்துல் வகாப் ஆரம்பத்திலேயே அவர் குடும்பத்தினர் கோரிக்கையை  நிராகரித்து  விட்டார். முன்னாள் எம்எல்ஏ மற்றும்  அழகிரி ஆதரவு பிரமுகர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மாலைராஜா இறுதிவரை  மல்லுக்கு நின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வரை சென்று போராடினார். கடைசி நாளில் தானே திமுகவின் அதிகாரபூர்வமான வேட்பாளராக  என வேட்பு  மனுவும் தாக்கல் செய்தார். ஆனாலும் தலைமையிடம் பேசி அவரை வாபஸ் பெற வைத்து விட்டார் அப்துல் வகாப்.

publive-image

திமுக சுப்பிரமணியன்

நெல்லை மேயர் இருக்கையை குறி வைத்து திமுக முக்கிய  பிரமுகர்கள் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். இதில் முக்கியமானவர் முன்னாள் தச்சை மண்டல தலைவர் சுப்பிரமணியன். அரசியலில் அதிக அனுபவம் கொண்டவர்.  இவரது உடன் பிறந்த சகோதரர் ஜெகந்நாதன்  நெல்லை மாநகராட்சியில் துணை மேயராக இருந்தவர். அரசியல் பின்னணியுடன் பொருளாதார பலம், கட்சிக்காரர்களிடம்  நெருக்கம்  போன்றவற்றால் எப்படியும் மேயராகி விட வேண்டும் என்ற தனது முயற்சியில்  தீவிரமாக  இருக்கிறார் இவர்.  இவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

publive-image

திமுக K ராஜ்

இந்த ரேஸில் அவருக்கு இணையாக நிற்பவர் தேர்தல் பொறுப்பாளர் ராஜகண்ணப்பன் ஆதரவு பெற்ற கே.ராஜ். யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர். செல்வந்தர். பொது மக்கள் மத்தியில் செல்வாக்கான இவர் தனது பகுதியில் இருக்கும் அதிக அளவிலான யாதவ வாக்குகளுடன் கவுன்சிலராகி தேர்தல் பொறுப்பாளர் ராஜ கண்ணப்பனின்  கடைக்கண் ஆசியுடன் மேயராவார் என்று அடித்து சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

publive-image

திமுக கோட்டை கருப்பசாமி

அடுத்தவர்  கோட்டை கருப்பசாமி. வைகோ திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக தொடங்கிய போது நெல்லை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்   உட்பட பலரும் மதிமுக வுக்கு தாவி வைகோவுக்கு பலம் சேர்த்தனர்.  அப்போதும் கலைஞர்  திமுக விசுவாசியாகவே  திமுகவில் இருந்தவர்  திமுக பிரமுகர் கே. கே. கோட்டையப்பன். அவரது மகன் கோட்டை கருப்பசாமி.    இவரும்  மேயர் ரேசில் இருக்கிறார்.  இவர் நெல்லை மாநகர் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர். 

publive-image

திமுக உமா மகேஸ்வரி மகள் ரேவதி

அடுத்ததாக பெண் வேட்பாளர்களில் முக்கியமானவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி. மாநில மகளிர் அணி தலைவியின் ஆசி பெற்றவர் என்று சொல்லப் படும் இவர் மாவட்ட செயலரின் தீவிர  விசுவாசி. மேலிட ஆசியும் விசுவாசமும் தன்னை மேயராக்கும் என நம்புகிறார் நெல்லை  சிங் அல்வா குடும்பத்தை சேர்ந்த மகேஸ்வரி. மேயர் அல்லது துணை மேயர் பதவிக்கு இவர் குறி வைப்பதாக  சொல்கின்றனர் மகளிர் அணியினர். காரணம் நெல்லை மாநகராட்சியானது முதல்  முன்னாள் திமுக எம் எல் ஏ  ஏ எல் சுப்பிரமணியன் தவிர இது வரையில் மேயராக இருந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்பதே.

இவர்கள் தவிர மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன், தச்சை மேற்கு பகுதி செயலாளர்  டாக்டர். சங்கர், முன்னாள் துணை  மேயர் விஸ்வநாத பாண்டியன் மகன் பொன்னையா பாண்டியனின் மனைவி பிரபா சங்கரி, அகில இந்திய தேவர் பசும்பொன் தேவர் முன்னேற்ற கழக தலைவர் மூர்த்தி தேவரின் மனைவி சுதா , முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் மகள் ரேவதி போன்றோருக்கும் மேயர் பதவி மீது ஒரு  கண் உண்டு. குறைந்த பட்சம்  துணை மேயர் பதவிக்கு இவர்கள் முயல்வார்கள் என்கின்றனர் கழகத்தினர்.

திமுகவினர் கம்பீரமாக  களத்தில் கலக்கிக் கொண்டிருக்க அதிமுகவின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள்  எம்பி விஜிலா சத்யானந்த், தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி வசந்தி முருகேசன்,  நெல்லை  மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை  நெல்லை முன்னாள்  அதிமுக மேயர் புவனேஸ்வரி போன்ற வி ஐ பி க்கள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவினர்.   உள்ளாட்சி தேர்தலில் தமக்கு திமுக தலைமை வாய்ப்பு  தரும் என்ற இவர்களின் நம்பிக்கையை தூள் தூளாக்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். இவர்கள் அனைவரும் கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தும் ஒருவருக்கும் ஓகே சொல்லவில்லை திமுக தலைமை.

தற்போதைய 55 வார்டுகளில் அதிமுகவினரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது முன்னாள் திமுக துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக  தச்சை  பகுதி செயலாளர் தச்சை மாதவன், விஜி, திவ்யா மாதவன் என்று பலரும் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். இதற்கு திமுகவினரின் பண பேரம் தான் என்றும் மிரட்டல் என்றும் பல்வேறு யூகங்களை உச்சரிக்கிறார்கள் மாநகர் மக்கள். 

கழகத்தினர் இப்படி கலக்கிக் கொண்டிருக்கும் சில வார்டுகளில் சுயேட்சைகளும்  ஆதிக்கம் செலுத்துகின்றனர். நெல்லை மாநகராட்சி 13ம் வார்டில் சுயேட்சையாக போட்டியிடும்  கொப்பரை சுப்பிரமணியன், 14 வது  வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் இவரது  மனைவி கவிதா 6 வது வார்டில் திமுக போட்டி வேட்பாளராக போட்டியிடும் கருப்பசாமி பாண்டியனின் பேரன் கந்தசாமி, 27 வது வார்டில் திமுக போட்டி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி போன்றோர் திமுகவின் வாக்குகளை பிரிக்கலாம். இவர்களில் கொப்பரை சுப்பிரமணியன் இரண்டு முறை 13 வது  வார்டில் சுயேட்சையாக வென்றவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நெல்லை மாநகராட்சியை உள்ளடக்கிய நெல்லை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவரான இவர் தனது  தனிப்பட்ட செல்வாக்கால்  திமுகவின் பாரம்பரிய அரசியல்வாதி ஏ எல் சுப்பிரமணியன் மகன் லட்சுமணனை வென்றார். மற்றபடி பாஜக கட்சிக்கு நெல்லை தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது என்று பாஜகவினருக்கு தெரியும். அதே நேரத்தில் இந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் யாரும் வெல்லும் நிலையில்  இல்லாததால் வருத்தத்தில் இருக்கின்றனர் பாஜகவினர். பாஜகவினர் தவிர தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தமக்கு செல்வாக்கு இருப்பதாக நினைக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றனர். இவர்களில் சிலர் திமுக வேட்பாளர்கள் வெற்றியை பாதிக்கலாம். 

மொத்தத்தில் அசுர பலத்துடன் களத்தில் இருக்கின்றனர் திமுகவினர். மொத்த வார்டுகளான 55 வார்டுகளில் குறைந்தது 45 வார்டுகளை பெற்று  தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் நெல்லை மாநகராட்சியை கைப்பற்றுவோம் என்று உறுதியுடன் சொல்கின்றனர் திமுகவினர்.

கட்டுரை: த.வளவன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment