/tamil-ie/media/media_files/uploads/2017/09/arasar-1.jpg)
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். ‘தெளிவான பார்வையுள்ள யாரும் இதை எதிர்க்கமாட்டார்கள்’ என அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கை...
தேசிய அளவிலான நீட் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின்படி நடத்தப்பட்டதால் மாநில பாடத் திட்டத்தில் படித்த கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிற நிலை ஏற்பட்டது. ஏனெனில் கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறுகிற பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாதது தான்.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்றை எட்டு வாரங்களுக்குள் தமிழகஅரசு வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
நவோதயா பள்ளிகளை கிராமப்புறங்களில் தொடங்க வேண்டுமென்று பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக 1986 ஆம் ஆண்டில் புதிய கல்வி கொள்கையில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. இக்கல்வி திட்டத்தின்படி மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி கிராமப்புற பின்னணியில் தொடங்கப்பட வேண்டும்.
இதில் 6 ஆவது வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே தங்கி நவீன, தரமான கல்வியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பள்ளியில் 75 சதவீத மாணவர்கள் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதோடு, 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
கடந்த 2015-16 இல் நாடு முழுவதும் உள்ள 589 நவோதயா பள்ளிகளுக்கு 1905 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 2 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இப்பள்ளியில் படிக்கிற ஒரு மாணவருக்கு ரூபாய் 85 ஆயிரம் மத்திய அரசு செலவழிக்கிறது. நகர்புறங்களில் கிடைக்கிற தரமான கல்வியை கிராமப்புறத்தில் வாழ்கிற பின்தங்கிய, ஆதிதிராவிட, மகளிருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் நவோதயா பள்ளிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இப்பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமான கல்வியை அடிப்படையாக வைத்து இந்திய ஆட்சிப் பணி, இந்திய தொழில்நுட்ப கழகம், நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்கிற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறது.
நவோதயா பள்ளி திட்டத்தின்படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழில் தான் பாடம் கற்பிக்கப்படுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் மொழி விருப்ப பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நவோதயா பள்ளியை பொறுத்தவரை மும்மொழி கொள்கை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்பாது நாடு முழுவதும் 1909 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 12 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் மும்மொழி திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. இதை அனுமதிக்கிற தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுப்பது ஏன் ? ஏன் இந்த பாரபட்சம் ?
தேவையற்ற மொழி சர்ச்சையை ஏற்படுத்தாமல் நவோதயா பள்ளிகள் குறித்து தெளிவான பார்வை இருந்தால் எவரும் இதை எதிர்க்க மாட்டார்கள். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கினால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டத்திற்கும் ரூபாய் 20 கோடி வீதம் 640 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை வராமல் தடுக்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
எனவே, கிராமப்புறத்தில் தரமான, நவீன கல்வி வசதியில்லாத சூழலில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது மிகமிக அவசியமாகும். இந்த பள்ளியில் மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் தான் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர வேண்டுமென்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள் நவோதயா பள்ளிகளில் சேர்ந்த படிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இத்தகைய வாய்ப்பை மறுக்காமல் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் நவோதயா பள்ளிகளுக்கு எதிராக இருக்கும் சூழலில், திருநாவுக்கரசர் இந்த அறிக்கையை விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.