Advertisment

திமுக எனும் விதையை விதைத்த "அறிஞர் அண்ணா" பிறந்தநாள் இன்று

திராவிடர் முன்னேற்ற கழகம் என்ற விதையை முதன்முதலில் விதைத்த சி.என்.அண்ணாதுரையின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக எனும் விதையை விதைத்த "அறிஞர் அண்ணா" பிறந்தநாள் இன்று

திராவிடர் முன்னேற்ற கழகம் என்ற விதையை முதன்முதலில் விதைத்த சி.என்.அண்ணாதுரையின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Advertisment

அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை கடந்த 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதியன்று, நடராஜன் - பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், உயர் கல்விக்காக சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். முதலில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர் பொருளாதரத்திலும், அரசியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் என்பதால் அவர் “அறிஞர் அண்ணா” என்று அழைக்கப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுச் செயலாளர் மட்டுமின்றி, முதன் முதலாக வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதலமைச்சரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற விதையை முதலில் விதைத்தவர் அண்ணா தான்.

தன் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்ட அவர் தந்தைபெரியாரின் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பின்னர், அங்கிருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறமைதான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப்பெரும் ஊக்கத்தைக் கொடுத்து, கழகம் வளர்ச்சி பெற பேருதவியாக அமைந்தது. அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கம். இன்றுவரை தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கத் தலைவர்களுக்கு எல்லாம் அறிஞர் அண்ணா ஆசானாகத் திகழ்கிறார்.

1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாநில முதலமைச்சரானார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை தமிழகத்தில் அண்ணா அமல்படுத்தினார்.

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு "கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், திராவிடத்துக்கும், தமிழகத்துக்கும் அளப்பரிய பணியாற்றிய முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Dmk Cn Annadurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment