மகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் இருந்தனர். இவரது மூத்த மகள் மோகனா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ டிரைவராக உள்ள உறவினர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இவர்களது காதலுக்கு ராஜேந்திரனின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதனால், பெற்றோரை மீறி, மோகனா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ராஜேந்திரனின் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஞாயிறு) காலை வெகுநேரமாகியும், ராஜேந்திரனின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன், அவரது மனைவி, இளைய மகள், மகன் ஆகிய நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பெண்ணின் காதல் திருமணத்திற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்தது தாண்டானூர் கிராமத்தினரை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close